சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் பஞ்சமில்லாமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சராசரியாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிலசம்பவங்களே வெளி உலகுக்கு அம்பலமாகிறது. சிலசம்பவங்கள் குடும்ப மானம் மரியாதை கருதி மறைக்கப்பட்டும், சில சம்பவங்கள் மிரட்டலுக்கு பயந்து உண்மையை சொல்லாமல் மூடிமறைப்பதால் தெரியாமலும் போய்விடுகிறது. ஒருசிலரே நடந்த கொடுமைக்கு துணிச்சலுடன் நீதி நியாயம் கேட்டு நீதிமன்றம் வரை போகிறார்கள்.
பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு நம்நாட்டில் எவ்வளவோ சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட போதும் எவ்வளவோ கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டபோதும் பயனின்றி தொடர்ந்து பெண்களுக்கும் மனித நேயத்திற்கும் எதிரான பாலியல் குற்றங்கள் குறையாமல் அனுதினமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது..இதற்க்குச்சான்றாக சமீபத்தில் நடந்த மனிதாபிமானமற்ற முறையில் வாய்பேச முடியாத ஒரு ஊமை அபலைப் பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஆம்..நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிவிளையாடும் தஞ்சைக்கு கலங்கம் விளைவிப்பதுபோல் நடந்த இந்தக் கொடுமை மிகப் பரிதாபத்திற்க்குரிய சம்பவமாகும். பாதிப்புக்குள்ளான இவர் ஒரு வாய் பேசமுடியாத ஊமைப் பெண் ஆவார். இந்த ஏழைப் பெண்ணை நான்கு மனித உருவம் கொண்ட மிருகங்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கடுமையாக தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
இதற்கடுத்து இன்னுமொரு வன்புணர்வு சம்பவம் சிலதினங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம் காந்தி நகர் கிராமத்தில் நடந்தவையே மிக அதிர்ச்சியடையச் செய்யும்படி இருக்கிறது. கிராம மக்களே இக்குற்றத்திற்கு தண்டனை வழங்கியுள்ளனர். வன்புணர்வு செய்த ஒரு வாலிபனை பலமாக அடித்து உதைத்ததுடன் அப்படியும் ஆத்திரம் தீராமல் கசாப்புக் கடைக்கு இழுத்துச் சென்று அந்த வாலிபனின் ஆணுறுப்பை வெட்டி வீதியில் வீசி எறிந்து இருக்கிறார்கள். பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு பாடம் புகட்டும்படி நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
பாலியல் குற்றங்கள் அதிகப்படியாக வடமாநிலங்களில் நடந்து வருவதை நாம் கேள்விப் பட்டிருப்போம்.ஆனால் தற்போது வடமாநிலங்களை விட தென்மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.நாகரீகம் பின்தங்கியிருந்த அந்தக்காலத்தில் வயது வித்தியாசமின்றி மனதில் மலிவான எண்ணமின்றி பழகி வந்தனர். ஆனால் இன்றைய நிலையோ பத்துவயது பையனைக் கூட சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழலில் காலம் கலிகாலமாக ஆகிக் கொண்டிருப்பதை யோசிக்க வேண்டியுள்ளது.
பாலியல் குற்றங்கள் நடக்க பல காரணங்கள் உள்ளது. சிலரது பலகீனங்களும், சிலரது ஏழ்மை நிலைகளும்,,சிலரது உதவிகளின் எதிர்பார்ப்பும்,சிலரது மனம்விட்டுப் பேசிப் பழகும் வெகுளித் தனமும் பாலியல் குற்றம் செய்பவர்களுக்குச் சாதகமாக அமைந்து பாலியல் குற்றங்கள் செய்ய முற்ப்படுகிறார்கள்.
மேலும் சிலபெண்களின் இயற்க்கைக்கு மாறான அலங்காரங்களும் கவர்ச்சித் தோற்றமும், கவர்ச்சி உடையும், கவர்ச்சியான பேச்சும் கவர்ச்சியான நடையும் கூட பாலியல் குற்றத்திற்கு பாதை வகுக்கிறது.
அடுத்து பார்ப்போமேயானால் பாலியல் பலாத்கார குற்றம் செய்பவர்களிலேயே மிக வேறுபட்டவர்களாக கொஞ்சம்கூட ஈவு இராக்கமில்லாத அரக்க குணம்படைத்த காமக் கொடூரர்களும் இருக்கிறார்கள். இவர்களை ஒரு கொடூர காமவெறிபிடித்த சைக்கோ என்று கூட சொல்லலாம்.. இவர்கள் சதா இத்தகைய எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு அபலைப் பெண்ணென்றும் பாராமல் சிறுவர் சிறுமியரென்றும் பாராமல் வன்புணர்வு கொள்ளவேண்டும் என்கிற வக்கிரபுத்தி உடையோர்களாக இருக்கிறார்கள்.
ஆசைகளை அடக்கி மனத்தைக் கட்டுப்படுத்தி வாழத்தெரியாதவன் மனிதனாக இருக்க முடியாது. மனித நேயத்திற்கும் மனசாட்சிக்கும் விரோதமாக நடக்கும் இந்தக் கொடியோர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திலிருந்து தப்ப விடக்கூடாது.
இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் பாலியல் குற்றங்கள் பாலியல் பலாத்காரங்கள் செய்பவர்களுக்கு இன்னும் சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும்.இஸ்லாமிய சட்டத்தில் விபச்சாரம் செய்பவர்கள் பாலியல் குற்றம் புரிபவர்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். என்று எப்படிக் கடுமையான சட்டம் உள்ளதோ அதுபோல கடுமையான தண்டனையை சட்டமாக்க வேண்டும் அப்போதுதான் இத்தகைய பாலியல் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
அதிரை மெய்சா
No comments:
Post a Comment