இன்றைய நாகரீக உலகில் ஒரு புறம் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று மனித வாழ்விற்கு பல்வேறு கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து வந்தாலும் மறு புறம் மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளுதல்,உதவி செய்தல் போன்றவை குறைந்து மன அழுத்தமும்,ஏமாற்றங்களும் நிறைந்து தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.
உலகில் நடைபெறும் தற்கொலைகள் குறித்து உலக சுகாதார துறை சமீபத்தில் முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகெங்கிலுமாக ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்று விவரம் வெளியிட்டுள்ளது.சராசரியாக 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்வதாகவும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை அளவு வறுமை அதிகமுள்ள நாடுகளிலும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலிருந்து வருகிறது.
குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் தற்கொலைகள் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் நடக்கின்றன. விகிதாச்சார ரீதியில் அதிக தற்கொலை நடக்கும் நாடுகள் என்று பார்க்கையில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 28.5 தற்கொலைகள் என்ற விகிதத்தில் இலங்கையில் தற்கொலைகள் நடக்கின்றன. இதில் 11வது இடத்தில் உள்ள இந்தியாவில் இந்த விகிதம் 21.1ஆக உள்ளது.
15 முதல் 29 வயது வரையிலானோரின் மரணங்களைப் பொறுத்தவரையில் முதல் பெரிய காரணம் என்றால் அது தற்கொலைதான் என்றும், அதேநேரம் உலகில் பல இடங்களில் அதிகம் தற்கொலை செய்துகொள்வோர் என்றால் அது 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள்தான் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் பார்க்கையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பூச்சிக் கொல்லி மருந்து , தூக்குமாட்டிக்கொள்வது, துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது, நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை உயரத்தில் இருந்து குதித்துவிடுவது போன்றவை தற்கொலை செயது கொள்வதற்கு அதிகம் பயன்படுத்தும் முறைகளாக உள்ளது.இவற்றை நினைத்தமட்டில் எளிதில் பெற முடியாது என்ற நிலையை உருவாக்கினால் தற்கொலைகளையும் தற்கொலை முயற்சிகளையும் குறைப்பதில் ஓரளவுக்கு வெற்றி காண முடியும் என்பதாக பணக்கார நாடுகளின் அனுபவமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
தற்கொலை என்பது ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினை என வர்ணித்துள்ள இந்த அறிக்கை, இதனை எதிர்த்துப் போராடவும், கட்டுப்படுத்தவும் வேண்டும் எனக் கூறுகிறது.தற்கொலைகள் பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மிகுந்த கவனமாக பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.
சுகாதார சேவை அமைப்புகள் தற்கொலைத் தவிர்ப்பை முக்கியமாகக் கருதி செயல்பட வேண்டும். ஏனெனில் மனநலப் பாதிப்புகள், மோசமான குடிப்பழக்கம் போன்றவை தற்கொலைகளுக்கு வழிவகுக்கும் விஷயங்களாக இருக்கின்றன.
சர்வதேச அளவில் 28 நாடுகளில் மட்டுமே தற்கொலையை தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.பெரும்பாலான உலக நாடுகள் தற்கொலைகளைத் தடுப்பதற்கு வேண்டிய செயல் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் இந்த நிலை மாற வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
No comments:
Post a Comment