பாரதீய ஜனதா எம்.பி ஒருவர் மது அருந்திவிட்டு மக்களவைக்கு வந்தார் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர். ரயில்வே பட்ஜெட்டை எதிர்த்த தங்களை தாக்க முயன்றதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாராளுமன்றத்தில் இருந்து வெளியே ஓடிவந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கல்யான் பானர்ஜி, பாரதீய ஜனதா கட்சி எம்பிக்கள் எங்களை மிரட்டுகின்றனர். எங்களை கெட்டவார்த்தையால் திட்டுகின்றனர். எங்களை அடிக்கபோவதாக மிரட்டுகின்றனர் என்று தெரிவித்தார். அவருடன் பிற திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்களும் உடன் வந்தனர்.
மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ககோலி கோஷ் தாஸ்திதர் கூறுகையில், நாங்கள் அமைதியாக லோக்சபாவில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தோம். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி மது போதையில், பிற பாஜக உறுப்பினர்களுடன் வந்து எங்களை மிரட்டினார். அவர் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார். மேலும், எங்கள் கட்சி பெண் எம்.பிக்களையும் தாக்க வந்ததாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் குற்றம் சாட்டினர். இதைதொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் புகாரை பாஜக மறுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களை அமைதிப்படுத்தவே எங்கள் கட்சி உறுப்பினர்கள் முயன்றனர் எனறு பாரதீய ஜனதா உறுப்பினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment