உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்வுகள் அடங்குவதற்குள்ளாக மற்றுமொரு கோரச் சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த பத்து வயதே ஆன இரண்டு சிறுமிகளை சிலர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.இந்தியாவில் காலம் காலமாக சிறுவர், சிறுமியர் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில சம்பவங்கள் மட்டுமே அத்திப் பூத்தாற்போல வெளிவருகின்றன.
இந்தியாவில் கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வின்படி, நம் நாட்டில் 53 சதவீத குழந்தைகள் (5 வயது முதல் 12 வயது வரை) பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். அதாவது சராசரியாக மூன்றில் இரண்டு குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்குமேயன்றி குறைய வாய்ப்பில்லை. நாட்டின் நிலைமை இவ்வாறு இருக்க, பாலியல் வன்முறைக்குள்ளாகி நீதி கேட்டுச் செல்லும் சிறுமிகளும், அவர்களின் பெற்றோரும் எதிர்கொள்ளும் கொடுமைகளும், அவலங்களும் ஏராளம்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி உள்ள சிறுமிகளின் பெற்றோர், நீதி வேண்டி முதலில் செல்வது காவல்துறையினரிடம்தான். ஆனால் உடலளவிலும், மனதளவிலும் காயப்பட்டு கண்ணீருடன் செல்லும் அவர்களிடம் போலீஸார் நடந்துகொள்ளும் முறை மிகவும் அநாகரிகமானது. மேலும் புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை (ஊ.ஐ.த.) பதிவுசெய்யக் கூட போலீஸார் முன்வருவதில்லை.
இதுதவிர, கேட்கக்கூடாத கேள்விகளால் சிறுமியை துன்புறுத்தும் அவர்கள், பாலியல் வல்லுறவுக்கு சாட்சி இருந்தால் மட்டுமே புகார் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கின்றனர். குற்றவாளி செல்வாக்கு மிகுந்தவராக இருக்கும்பட்சத்தில் போலீஸாரின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்க வேண்டியதே இல்லை.இதனைத்தொடர்ந்து சாட்சியும், சிகிச்சையும் வேண்டி பாதிக்கப்பட்ட சிறுமியர், கொண்டு செல்லப்படும் மருத்துவமனைகளில் நடப்பதுதான் கொடுமையின் உச்சம். பாலியல் பலாத்கார விவகாரங்களில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சோதனைதான் தற்போதும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மேற்கொள்ளப் படுகிறது.
இச்சோதனைக்கு முன்பே இதுகுறித்து முழுமையாக சிறுமியிடம் விவரிப்பார் மருத்துவர். இதற்கு அஞ்சியே பெரும்பாலான சிறுமிகளின் பெற்றோர் பின்வாங்கிவிடுகின்றனர். போலீஸ் – நீதிமன்ற விசாரணைகள் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக, மருத்துவமனைகள் கையாளும் சூழ்ச்சி இது.இதுபோன்ற சோதனைகளையெல்லாம் எதிர்கொண்டு நீதி கேட்கச் செல்லும் மிகச் சிலரின் மன உறுதியும் நீதிமன்றங்களில் சிதைக்கப்பட்டு விடுகிறது. நீதிமன்ற விசாரணையின்போது ஆண்டுக்கணக்கிலான வாய்தாக்கள், நா கூசும் கேள்விகள் போன்றவற்றையெல்லாம் கடந்து, தீர்ப்பு வெளியாக பல ஆண்டுகள் ஆகிவிடும். வாச்சாத்தி பாலியல் பலாத்காரச் சம்பவமே இதற்கு ஓர் உதாரணம்.
அதிலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு பெரும்பாலான வழக்குகளில் குறைந்தபட்ச தண்டனையே கிடைக்க வழிச்செய்கிறது நமது நீதித்துறை. சில நேரங்களில் வெற்றுக் காரணங்களை முன்வைத்து வழக்கு தள்ளுபடியும் செய்யப்பட்டுவிடும். கொடூரமான குற்றங்களுக்கு காலம் கடந்து வழங்கப்படும் தீர்ப்பால் என்ன பயன்? குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்திருக்கும் இந்த காலத்தில் பழங்காலச் சட்டங்களே நடைமுறையில் இருப்பதில் என்ன பிரயோஜனம்?
தில்லி நிர்பயா விவகாரத்துக்கு பின்னரும் இதே நிலைதான் நாடு முழுவதும் பரவலாக அமலில் உள்ளது. இந்தியாவின் வருங்காலத் தூண்களை பிஞ்சிலேயே நசுக்கிவிடும் பாலியல் வன்முறைக்கு காரணமானவர்கள் மட்டுமே குற்றவாளிகளா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!
ஜா. ஜாக்சன் சிங்
நன்றி : வி. களத்தூர்
No comments:
Post a Comment