சென்னை: கேஸ் சிலிண்டர் விலையை மாதா மாதம் 10 ரூபாய் அளவுக்கு ஏற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவியுள்ளன. இது மானிய விலை சிலிண்டர்களுக்கான விலை உயர்வாகும். இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 6ஆக குறைக்கப்பட்டது. பின்னர் 2013ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 9ஆகவும், கடந்த ஜனவரி மாதம் 12ஆகவும் அதிகரிக்கப்பட்டது. ஈராக் உள்நாட்டு யுத்தம் உள்ளிட்ட காரணங்களினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், பெட்ரோலியப் பொருள்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியமும் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
தனால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்யும் வகையில், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, அவரது அமைச்சகத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை அமைப்பு பரிந்துரை அளித்துள்ளது. அந்த பரிந்துரையில், மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் ரூ.10 அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பிரதமர் அலுவலகத்துக்கு பெட்ரோலிய அமைச்சகம், திட்டம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 115 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது' என்றனர்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபிறகு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத் தொடரில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதுதான் பயணிகள் ரயில் பயணக் கட்டணமும், சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து கேஸ் சிலிண்டர் மீது மத்திய அரசு கை வைக்கப் போவதால் மக்கள் விழி பிதுங்கப் போகின்றனர். மோடி அரசு எடுத்த எடுப்பிலேயே மக்கள் மீது சம்மட்டி அடியைக் கொடுக்க ஆரம்பித்திருப்பதாகவும் முனுமுனுப்புகள் கிளம்பியுள்ளன.
No comments:
Post a Comment