இலங்கையின் தெற்கே களுத்துறை மாவட்டம் அளுத்கம மற்றும் வேருவளை ஆகிய இடங்களில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது
இதன் காரணமாக இம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஒட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வியாபார நிலையங்களும் தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. சந்தைகள் கூடவில்லை. மாணவர்கள் வரவின்மையால் பாடசாலைகள் இயங்கவில்லை.அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகளிலும் ஸ்தம்பித நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏறாவூர் பிரதேசத்தில்வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று இன்று அதிகாலை காவல்துறையினரால் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அதனை நிராகரிக்கும் வகையில் அந்த பிரதேச வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள், அளுத்கம மற்றும் வேருவளை பிரதேச முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் பொது பல சேனாவை தடை செய்ய வேண்டும் என கோரியும் கவன ஈர்ப்பு பேரணியொன்றை நடத்தினார்கள்.
காத்தான்குடி மெத்தப்பள்ளிவாசல் முன்பாக ஓன்று கூடிய ஆயிக்கணக்கான முஸ்லிம்கள், அந்த பிரதேசத்தின் சிவில் நிர்வாக மையமான பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று இது தொடர்பாக ஜனாதிபதிக்கான மகஜரொன்றை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.
காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் ஜம் இயத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது.
No comments:
Post a Comment