ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் அரசியல்வாதிகள் பணம் தருவதை நிறுத்துவார்கள் என முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி கூறினார்.
இந்திய முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விழிப்புணர்வு
தேர்தலில் அரசியல்வாதிகள் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல வழிமுறைகளை செய்து வருகிறது. ஆனாலும் அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பணத்தை தந்துவிடுகின்றனர். இதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு போதுமான ஆட்கள் இல்லை. ஓட்டுக்கு பணத்தை வாங்க மாட்டோம் என வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
பணத்தை தர வரும் அரசியல்வாதிகளிடம் கூறி திருப்பி அனுப்பினால் தான் ஓட்டுக்கு பணம் என்ற நிலைமை மாறும். புதிய வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு ஓட்டு போட வருவதை வரவேற்கிறேன்.
ஆளுங்கட்சிக்கு சாதகம் அல்ல
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறுவது சரியானதல்ல. தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறது. வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லை என பெரும்பாலானவர்கள் கூறுவது சரியானதல்ல. தேர்தல் ஆணையம் மாதிரி வாக்காளர் பட்டியல், இறுதி வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை வெளியிடும் போது தங்களது பெயர்கள் இருக்கிறதா என்பதை வாக்காளர்கள் பார்க்க வேண்டும்.
அப்போது பார்க்காமல் இறுதி நேரத்தில் தனது பெயர்கள் இல்லை என கூறுவது சரியானதல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பது பற்றிய விழிப்புணர்வு வாக்காளர்களுக்கு ஏற்பட வேண்டும்.
No comments:
Post a Comment