துபாயில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்த ஹுமைத் ஹபிப் அபுபக்கருக்கு (15) அமீரகத்தில் பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் கல்வி விருது’ கடந்த 22ம் தேதி துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வழங்கப்பட்டது.
விருதினை துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.
இவ்விருது 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணாக்கர்களுக்கு கடந்த மூன்று ஆண்டு கல்வித் திறனோடு, பொதுச் சேவை, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுதல் உள்ளிட்டவை கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
விருது பெற்ற மாணவரின் பெற்றோர் ஹபிப் அபுபக்கர் – யாஸ்மின் தம்பதியர் ஷார்ஜாவில் வசித்து வருகின்றனர். ஹபிப் அபுபக்கர் ஷார்ஜா எடிசலாட்டில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். ஹுமைத் அபுபக்கர் ஷார்ஜா அவர் ஓன் இங்கிலீஷ் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
விருதினைப் பெற்ற ஹுமைத் நமது செய்தியாளரிடம் தெரிவித்ததாவது,
ஷேக் ஹம்தான் விருதினைப் பெற வேண்டும் என்பது எனது இலட்சியங்களில் ஒன்றாக இருந்து வந்தது. இறைவனின் உதவியால் இவ்விருது எனக்கு எனது பள்ளி நிர்வாகம், ஆசிரியர், பெற்றோர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கத்தின் காரணமாக கிடைத்துள்ளது.
மேலும் ஈடிஏ அஸ்கான் நிறுவனம், ஈமான் அமைப்பு, தமிழ் ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது என்றார்.
அவருக்கு ஈடிஏ அஸ்கான் நிறுவன உயர் அதிகாரி எம். அக்பர் கான், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, டிடிஎஸ் ஈவென்ட்ஸ் ஜெயந்தி மாலா சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விருது பெற்ற மாணவரை வாழ்த்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 056 7177123
No comments:
Post a Comment