இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, இங்கு பிரிட்டனில் இருக்கும் முஸ்லிம்களால் ஒரு கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு என்ற இயக்கத்தின் தலைமையில், பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள்.
பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக கோசமிட்டு ஆர்பாட்டை ஆரம்பித்த முஸ்லிம்கள், அங்கிருந்து ஊர்வலமாக இலங்கை தூதரகத்தை நோக்கிச் சென்றனர்.
பொதுபலசேனா உட்பட சில அமைப்புக்களின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலும், சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிச் செய்யக் கோரியும் சில பாதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.
இந்த போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களின் பேச்சாளரான எம் . பௌசர் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டம் பற்றிக் கூறுகையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக சர்வதேச சமூகத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் கோரும் வகையில் தமது இந்த முதலாவது போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறினார்.
அதேவேளை, இந்த போராட்டத்துக்கும் தமக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று இலங்கை உலமாக்கள் சபையும், இலங்கையில் உள்ள முஸ்லிம் கவுன்ஸில் என்ற அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. குறைகள் இருப்பின் முஸ்லிம்கள் பிரிட்டனுக்கான இலங்கை தூதுவரிடம் அது குறித்து முறைப்பாடு செய்யலாம் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
ஆனால், கடந்த காலங்களில் தம்மால், இலங்கை தூதரிடம், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அநீதிகள் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எந்த விதமான பலனும் கிட்டாத காரணத்தினாலேயே, இந்த போராட்டத்தை தாம் ஏற்பாடு செய்ததாக இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் அமைப்பின் தலைவரான எஸ். நசீர் கூறினார்.
No comments:
Post a Comment