சென்னை: நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நட்புடன் இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பாஜகவின் தலைவர்களின் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவிக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை அறியவும் , இந்திய அரசின் நலத் திட்டங்களை ஈழத் தமிழர்களுக்கு வழங்கவும் அனைத்து பாராளுமன்ற குழுவுடன் 2012 ஆம் ஆண்டில், சுஷ்மா சுவராஜ் இலங்கை சென்றார். இந்த குழுவிற்கு தலைமை தாங்கிய சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார் .
இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தாமல், இனப்படுகொலை அங்கு நடந்துள்ளது, அதற்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதையும் குறிப்பிடாமல் வெறும் இந்திய அரசின் நலத் திட்டங்களை அங்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளார் சுஷ்மா. மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தமிழர்களின் இன்னல் தீர பேச்சுவார்த்தை நடத்தாமல் அவர் கொடுத்த பரிசுப் பொருட்களை மட்டும் வாங்கி வந்துள்ளார் . அத்தோடு நில்லாமல், இலங்கை சுற்றுப் பயணம் முடிந்தவுடன் , தமிழர்களின் அறுபது ஆண்டுகால போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் தமிழர்களுக்கு ஈழம் அவசியமில்லை , அதை தமிழர்கள் கேட்கவுமில்லை என்று கூசாமல் கூறினார் இந்த சுஷ்மா சுவராஜ்.
இவர் அங்கு சென்று வந்த பின்பும் தமிழர்களின் நிலை ஒரு இம்மியளவும் முன்னேற்றம் காணவில்லை. தமிழர்கள் மேன்மேலும் அச்சத்துடனும் , அடக்குமுறைக்கு ஆளாகியும் வாழ்ந்து வருகின்றனர்.
அச்சம்.. அவநம்பிக்கை..
ஆனால் இதைப் பற்றியெல்லாம் சுஷ்மா கவலைப்பட்டதாக தெரியவில்லை. தமிழர்களின் சார்பில் பேசி இருக்க வேண்டிய இவர் இலங்கை அரசின் சார்பாகவே பேசினார். இந்நிலையில் இப்போது சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளது , தமிழர்கள் மத்தியில் அச்சத்தையும் அவநம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு ஓரளவு நியாயம் கிடைக்கும் என்று தமிழர்கள் நம்பி இருந்தனர். அந்த நம்பிக்கை மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே கௌரவிக்கப்பட்ட போதே பெருமளவில் தகர்ந்தது. மிச்ச மீதி இருந்த நம்பிக்கையும் சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சர் என்று அறிவிக்கப்பட்ட போது தகர்ந்துள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் காரணமாக தமிழர்கள் இவ்வாறு கருத வேண்டி உள்ளது. இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய வெளியுறவுத் துறைக்கு தான் அதிகமாக உள்ளது.
இலங்கை பங்காளிகள்
காங்கிரஸ் ஆட்சியின் போது இந்திய வெளியுறவுத்துறை, இந்தியத் தூதுவர்கள் அனைவரும் இலங்கை அரசின் நெருங்கிய பங்காளிகளாகவே செயல்பட்டு வந்தனர். அதனால் தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த தமிழர் விரோத ஆட்சியைப் போலவே இம்முறையும் வெளியுறவுத் துறை இலங்கையுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டால் தமிழர்களுக்கு நீதி கிடைப்பது என்பது எட்டாக் கனியாகிவிடும். ஏற்கனவே சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபருடன் நட்பில் இருக்கும் காரணத்தால், இவரால் தமிழர்களுக்கு தேவையான நீதியும் , உரிமையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்றே நாங்கள் கருதுகிறோம்.
கண்டனம்
அதனால் சுஷ்மா சுவராஜ் அவர்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக பாஜக அரசு தேர்வு செய்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இலங்கையுடன் இந்தியத் தரப்பில் எந்த பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் தமிழ்நாட்டு தலைவர்களின் ஆலோசனையும் பங்களிப்பும் கட்டாயமாக இடம் பெற வேண்டும் எனவும் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment