சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து கோரக்பூர் செல்லும் கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபிர் நகர் ரயில் நிலையத்தின் அருகே இன்று காலை 10.30 மணியளவில் வந்துகொண்டிருந்தபோது, அதே டிராக்கில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியது. மோதிய வேகத்தில் அதன் 3 பெட்டிகள் தடம் புரண்டன. தண்டவாளத்தின் அருகேயுள்ள மரங்களில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மோதி சிதறின. இந்த கோர விபத்தில் கோரக்தாம் ரயிலின் 6 பெட்டிகளில் இருந்த பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கோரக்பூர் மற்றும் கோண்டா ரயில் நிலையங்களில் இருந்து மீட்பு ரயில்கள் சம்பவ இடத்துக்கு சென்று பயணிகளுக்கு முதலுதவி செய்தன. விபத்தில் சிக்கிய, ரயில் பெட்டிகளை வெல்டிங் இயந்திரங்கள் கொண்டு ரயில்வே அதிகாரிகள் வெட்டி பிரித்தனர். அப்போது மேலும் 20 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. எனவே மாலையில் பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்தது.
இரு ரயில்களும் ஒரே டிராக்கில் வர சிக்னல் கோளாறுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ரயில் பயணிகள் குறித்த தகவலுக்கு வடக்கு ரயில்வேயின் 97948309774, கோரக்பூர் ரயில் நிலையத்தின் 0551-22048893, லக்னொ ரயில் நிலையத்தின் 0522-2635639 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இதனிடையே விபத்துக்கு தனது இரங்கலை நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் தனித்தனியே இரங்கல் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் விரைந்து குணமாக வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment