கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி சாதனை படைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைக்கவில்லை. ஜனலோக்பால் மசோதாவை, சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் 49 நாள் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சட்டசபை கலைக்கப்படவில்லை எனினும் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தக்கோரி, அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 7 தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியதுடன், 60 சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சி முன்னணி வகித்துள்ளது. 10 தொகுதிகளில் மட்டுமே ஆம் ஆத்மி முன்னிலை பெற முடிந்தது.
இது ஆம் ஆத்மி கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் தற்போதையை நிலையில் டெல்லியில் மீண்டும் தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை. எனவே காங்கிரஸ், அல்லது பா.ஜனதா ஆதரவுடன் மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்க அவர்கள் யோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்று சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஒன்றையும் நடத்தினர்.
ஆனால் ஆம் ஆத்மியின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மியின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவளிக்காது என டெல்லி காங்கிரஸ் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment