2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஒருவழி பயணமாக மனிதர்களை அழைத்துசெல்லும் மார்ஸ் ஒன் திட்டத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல இதுவரை 44 இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அராய்ச்சி முழுமூச்சாக நடைபெறும் வேளையில், 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நெதெர்லாண்ட் நாட்டைச் சேர்ந்த மார்ஸ் ஒன் நிறுவனம் முதல் முறையாக பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஒரு வழி பயணமாக அழைத்து செல்ல திட்டமிட்டு இது குறித்து அதன் இணையதளத்தில் அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து உலகெங்கும் உள்ள 140 நாடுகளில் இருந்து சுமார் 2,00,000 மக்கள் ஆர்வமாய் விண்ணப்பித்தனர். இவர்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்களும் அடங்குவர்.
செவ்வாய்க்கு செல்ல விண்ணப்பித்தவர்களை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிய மார்ஸ் ஒன் நிறுவனம் அவர்களின் உடல்நலம் குறித்த சான்றுகளை அனுப்புமாறு தெரிவித்தது.
ஏற்கனவே உலகம் முழுவதிலும் இருந்து விண்ணப்பித்தவர்களில் இருந்து, முதல் கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவர்களில் 353 பேரை நிராகரித்த மார்ஸ் ஒன் நிறுவனம் தற்போது மீதமுள்ள 705 பேரை தேர்வு செய்துள்ளது. இவர்களில் 418 பேர் ஆண்கள் மற்றும் 287 பேர் பெண்கள். இப்பட்டியலில் 44 பேர் இந்தியர்களாவர். இவர்களில் 27 பேர் ஆண்கள் 17 பேர் பெண்களாவர்.
தேர்வு செய்யப்பட்ட இந்தியர்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், புனே, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 705 பேருக்கும் அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பயணத்திற்கான பயிற்சிகளில் ஈடுபடுத்தபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment