ராஞ்சி: நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டும் என்று பேசிய பாஜக மூத்த கிரிராஜ்சிங்க்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது. பீகார் மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரிராஜ் சிங், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசுகையில், நரேந்திர மோடியை விமர்சிப்பவர்களுக்கு இங்கு இடமில்லை. பாகிஸ்தானில்தான் அவர்களுக்கு இடம் இருக்கிறது. அங்குதான் அவர்கள் போக வேண்டும் என்று பேசியிருந்தார்.
கிரிராஜ்சிங்கின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அவர் சார்ந்த பாரதிய ஜனதாவும் கூட எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அத்துடன் தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிராஜ்சிங் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கிரிராஜ்சிங் மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிரிராஜ்சிங்கை கைது செய்ய ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டையும் பிறப்பித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் கிரிராஜ்சிங் கைது செய்யப்படலாம் என்று ஜார்க்கண்ட் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment