டெல்லி: நாட்டில் தற்போது மத்திய அரசுக்கு எதிரான அலை வீசுகிறது; எங்களது மத்திய அரசு ஒன்று அல்லது இரண்டு தவறுகள் செய்துள்ளதுதான் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 'ஈ டிவி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சில தவறுகளை செய்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதே நேரத்தில் கிராமப்புற ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியைப்போல நாங்கள் அவற்றை விளம்பரப்படுத்தவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 10 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளது. இது குறைவான காலம் அல்ல. நீண்ட காலம். எனவே, ஆட்சிக்கு எதிரான அலை இருப்பது உண்மைதான். தேர்தலுக்கு பிறகு, நான் பிரதமர் ஆக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் விரும்பினால், அதை 99% அல்ல, 103% ஏற்றுக்கொள்வேன். எனது தலைமையிலான அரசு, இந்தியாவை மாற்றி அமைக்கும். அந்த அரசு நடைமுறையையும், கட்டமைப்பையும் மாற்றி அமைக்கும். அது, வழக்கமான அரசாக இருக்காது. தீவிரமான அரசாக இருக்கும். நாட்டின் கட்டமைப்பை தீவிரமாக மாற்றி அமைக்கும். அபரிமிதமான செயல்பாட்டை அளிக்கும்.
அந்த அரசு ராகுல் காந்தி அரசாக இருக்காது. இந்திய மக்களின் அரசாக இருக்கும். அதிகார மையங்களில் மக்களின் குரல் எதிரொலிக்கும். மக்களுக்கு கூடுமானவரை அதிகாரம் அளிப்போம். அவர்கள் தாங்களாகவே அதிகாரத்தை பெறலாம். குஜராத்தில், லோக் ஆயுக்தா கிடையாது. அங்கு ஒளிவுமறைவாக ஊழல் நடக்கிறது. லோக் ஆயுக்தாவையும், தகவல் பெறும் உரிமை சட்டத்தையும் கொண்டு வருமாறு குஜராத் அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வருகின்றன. குஜராத்தின் காவலாளி என்று தன்னை ஒருவர் சொல்லிக்கொள்கிறார். இந்த நாட்டுக்கு ஒரு காவலாளி தேவை இல்லை. ஒவ்வொரு குடிமகனையும் காவலாளி ஆக்குவதே எங்கள் விருப்பம். அதிகாரம், ஒரே இடத்தில் குவிந்து கிடக்கும் நடைமுறையை ஒழிக்க விரும்புகிறேன். முடிவு எடுப்பதில் ஒவ்வொருவரின் சொல்லுக்கும் மதிப்பு இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி அந்த பேட்டியில் கூறினார். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment