இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேட கடலின் தரை பரப்புக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் நீரின் ஆழம் அதிகமாக இருந்ததால் பாதியிலேயே தேடலை முடித்துக் கொண்டு திரும்பிவிட்டது.
கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசியா அறிவித்தது. இதையடுத்து விமானத்தை கடலில் தேடும் பணி 38 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. முதலில் கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்தது. அதன் பிறகு அந்த சிக்னலும் அடங்கிவிட்டது.
கடந்த 7 நாட்களாக ஒரு சிக்னலும் கிடைக்கவில்லை.
விமானத்தின் கருப்புப் பெட்டியை தேட ப்ளூஃபின் 21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் சிக்னல்கள் வந்த இடத்தில் கடலின் தரை பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் கடலின் தரை பரப்பில் 16 மணிநேரம் விமானத்தை தேடுவதாக இருந்தது. ஆனால் கடலின் ஆழம் 15 ஆயிரம் அடிக்கும் மேலாக இருந்ததால் கப்பலால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஆழம் அதிகம் இருந்ததால் நீர்மூழ்கி கப்பல் வெறும் 6 மணிநேரம் தேடிவிட்டு பாதியிலேயே நீரின் மேல்பரப்புக்கு திரும்பி வந்துவிட்டது. அந்த தேடலின்போது மலேசிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் 15 ஆயிரம் அடி ஆழத்தை தொட்டால் அது தானாகவே நீரின் மேல்பரப்புக்கு திரும்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்மூழ்கி கப்பல் ஆறு மணிநேரமாக சேகரித்த தகவலை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நீர்மூழ்கி கப்பல் பாதியில் திரும்பியது அதிகாரிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
ஃப்ளூஃபின் 21 மாயமான விமானத்தை தேட இன்று மீண்டும் கடலின் தரை பரப்புக்கு செல்ல உள்ளது. அங்கு வானிலை நல்லபடியாக இருந்தால் மட்டுமே நீர்மூழ்கி கப்பல் இன்று தேடல் பணிக்கு பயன்படுத்தப்படும்.
தேடல் பணியில் நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்துவதால் விமானத்தின் பாகங்கள் கிடைத்துவிடும் என்று அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அது நடக்காமல் கூட போகலாம் என்று தேடலுக்கு தலைமை வகிக்கும் அதிகாரியான ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment