தமிழ்நாட்டிற்குள் மோடி நுழைய முடியாது என்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. ஆதில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.ராசா, கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் கணேஷ்குமார், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.
அப்போது, ”தி.மு.க. தொடங்கியது தமிழர்களை காப்பாற்ற, தமிழனத்தை காப்பாற்றுவதற்காக தான் என அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் இன்றைக்கு உங்களையெல்லாம் நான் நாடியிருப்பது திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒரு நான்கு பேரை வெற்றிபெற செய்வதின் மூலம் இந்த இயக்கத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். நாம் சுட்டிக்காட்டுபவர் தான் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற அந்த ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.
நாம் தமிழ் பண்பாட்டோடு வாழ வேண்டும். தமிழன் யாருக்கும் தலை தாழமாட்டான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தான், இந்த இயக்கம், அன்று தொட்டு இன்று வரையிலே பாடுபட்டு வருகிறது. அப்படிப்பட்ட இயக்கத்துக்கு அண்ணா ஏற்றி வைத்த சுடர் விளக்கு அணையாமல் காக்கும் பெரும்பொறுப்பை உங்களை நம்பி நான் ஏற்று இருக்கிறேன். இந்த மக்களுக்கான ஆட்சியை, நல்லாட்சியை தரவேண்டிய கட்டம் இது.
நம்முடைய பயணத்தில் தேர்தல் என்பது ஒரு கட்டம். அந்த கட்டத்தை வெற்றிகரமாக தாண்டினால் நாம் எதிர்காலத்தில் நன்மை செய்யலாம். இந்த சமுதாயத்துக்கே நன்மை செய்யலாம். என்னை பொறுத்தவரை ஏறத்தாழ 1957 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலே சட்டமன்றத்திலே தொடர்ந்து பணியாற்றியிருக்கிறேன். நான் 5 முறை உங்களால் தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
6வது முறை களைத்துவிட்டாய் என்று என்னை ஒதுக்கிவிட்டீர்களோ? அல்லது நானாகவே விரும்பி பெற்றுக்கொண்டேனோ? இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வு கிடைத்துவிட்டது. இவன் எப்போது ஓய்வு எடுப்பான் அந்த நேரத்தில் அடிமைதனத்துக்கு உள்ளாக்கலாம் என்று கருதியவர்கள் அதை வெற்றிகரமாக செய்கிறார்கள். அவர்களின் மனப்போக்கை முறியடிக்க வேண்டும்.
எனக்கு தெரியாது. ஒரு வேளை இதுவே நான் கலந்து கொண்டிருக்கிற கடைசி தேர்தலாகக் கூட இருக்கலாம். அப்படி சொல்லாதே சொல்லாதே என்று நீங்கள் கையை வீசுகிறீர்கள். அப்படி சொல்லாமல் இருக்க நாங்கள் தமிழர்களாக வாழ்வோம் என்ற உறுதியை நீங்கள் அளித்தாக வேண்டும். அந்த உறுதியை அளித்தால் ஒன்றல்ல. இரண்டல்ல. பத்து அல்ல. பதினைந்து அல்ல. இன்னும் 50 வருடங்கள் கூட உயிருடன் நான் இருப்பேன்.
அப்படி அல்லாமல் அடிமைத் தமிழ்நாட்டில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டால் அது வாழ்க்கையாக இருக்காது. ஆகவே தான் தமிழன் தமிழனாக வாழவேண்டும். என்னுடைய 14வது வயதில் மொழி காக்க குரல் கொடுத்தேன். அந்த மொழி உணர்வு இந்த வயதிலும் பட்டுப்போகவில்லை. இந்த உணர்வு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கெல்லாம் இருந்தால் இனி கட்டாய இந்தி மொழி தமிழகத்தில் நுழையாது. இளைஞர்களாக இருக்கும் நீங்கள் அந்த உறுதியை பெறவேண்டும். என்னை நினைத்து அந்த உறுதியை பெறுங்கள். தமிழ்நாட்டிலே யார் வேண்டுமானாலும் நுழையலாம். அத்துமீறி நுழையலாம். ஆட்சி புரியவே எண்ணம் கொண்டு நுழையலாம் என்ற எண்ணம் மோடிகளுக்கும் ஏற்படாது.
மோடி அல்ல, யாரும் நுழைய முடியாது. மீறி நுழைந்தால் ஒரு கோடியில் தான் நிற்க வேண்டும். மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை. இந்தியாவுக்கு இருக்கிற சிறப்பே, நாம் கட்டிக்காத்த உறவுகள்தான். நாம் கட்டிக்காத்த வீரம்தான். தேர்தலிலே தோற்காதவர்கள் யார்? தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எல்லாம் இந்த நாட்டை ஆண்டு முடித்து விட்டார்களா? இல்லை. நம்முடைய லட்சியங்கள் ஈடேற வேண்டும் என்றால் மொத்த தமிழ் இனமும் அதற்கான போர்க்குரலை எழுப்ப வேண்டும்.
நாம் எப்படிப்பட்ட முதலமைச்சரை பெற்று இருக்கிறோம்? என்பது பெங்களூரில் நடைபெறும் அவரது சொத்து குவிப்பு வழக்கு ஒன்றே போதுமான உதாரணம். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரத்து 107 கோடி ஆகும். இந்த தேர்தலில் அவரை தப்பிக்கவிட்டால் இன்னும் பல கோடி ரூபாய் தமிழ்நாட்டில் சம்பாதிப்பார். அதற்கு இடம் கொடுக்க வேண்டும். நாம் ஏமாற தயாராக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் இந்த தேர்தலில் எங்களை ஆதரிக்காமல் அவர்களையே ஆதரியுங்கள். அப்போது தான் தமிழ்நாடு பொட்டல் காடாகும். அப்படி ஆக வேண்டும் என்று கருதினால் இந்த தேர்தலில் அந்த அம்மையார் சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
இல்லை என்றால் எங்கள் பேச்சை தயவு செய்து கேளுங்கள். நாங்கள் உங்களோடு இருப்பவர்கள். எங்கள் பேச்சை அலட்சியப்படுத்தினால் வந்ததை அனுபவியுங்கள் என்று சாபம் இடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே நீங்கள் இந்த சாபத்துக்கு ஆளாக மாட்டீர்கள். ஏனென்றால் எதிர்கால தமிழ் சந்ததியை வாழவைக்க முன் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்
No comments:
Post a Comment