Latest News

ஊடக சுதந்திரமும் வாக்காளர் சுதந்திரமும்


தேர்தல் என்று அறிவிக்கப்பட்டவுடன் சொல்லப்படுகிற முதல் சொலவடை “சுதந்திரமாக வும் நியாயமாகவும்’’ நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான்.சுதந்திரம், நியாயம் இரண்டுமே ஆலமரங்கள் போல் நிமிர்ந்து நிற்பவை அல்ல; நாணல்கள் போல் வளைந்து கொடுப்பவைதான்.வாக்காளர்ளுக்குப் பணம் கொடுத்து வாக்கு களைப் பெறுவது ஜனநாயகம் விற்கப்படுவதற்கு சமமானது. பணம் கொடுப்பதும் குற்றம்; பணம் வாங்குவதும் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை என்பதெல்லாம் நியாயம் தான். ஆனால் இதனைத் தடுப்பதற்கு என்ன வழி? வழக்கம்போல் பறக்கும்படை; வாகனங்கள் சோதனை; ‘உரிய’ ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லும் பணம், பொருள்கள் பறிமுதல் என்பதெல்லாம் ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் நியாயங்கள்.

உள்ளுக்குள் நடப்பதென்னவோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது சாமா னிய மனிதனும் ஒப்புக் கொள்ளும் பேச்சுத்தான். கருத்துக்கணிப்பு சம்பந்தமாக அண்மையில் தனது நிலையைத் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தடைசெய்ய இயலாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. தேர்தல் ஆணையத்திற்கும் அப்படிப்பட்ட அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டது. ஆனால் காங்கிரஸ் விடுவதாக இல்லை. அரசியல் சட்டத்தின் 324வது பிரிவைப்பயன்படுத்துங்கள். தேர்தல் தொடர்பாக சட்டம் இயற்றப்படாத விஷயங்களில் ஆணையமே தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அந்தப் பிரிவு கூறுகிறது என விளக்கமும் அளிக்கப்பட்டது.இந்தக்கருத்துக்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை தடை செய்ய சட்டம் இயற்றுங்கள் என்று நாங்கள் சொல்லி வருகிறோம். பத்தாண்டுகளாக ஆட்சி புரிந்தவர்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, இப்போது தேர்தல் ஆணையமே பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கலாம் என்பது சரியல்ல. அரசியல் சட்டப்பிரிவு 77ன் படி குடியரசுத்தலைவரின் நிர்வாக உத்தரவு பெற்றுத்தான் எதையும் செயல்படுத்த முடியும். அதனை அரசுதான் செய்யவேண்டும்;

தேர்தல் ஆணையம் அல்ல, என்று பிரச்சனை கை கழுவப்பட்டுவிட்டது.இருப்பினும் கருத்துக்கணிப்புக்குத் தடை விதிப்பது பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தேர்தல் ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோரிப் பெற்றது. அதில் பாஜக மட்டும்தான் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கென்றே பிறவியெடுத்தது போல், தடைவிதிக்கக் கூடாது என்று கூறியிருந்தது. எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இருக்கட்டும்… நுண்கலையாகிய ஓவிய சுதந்திரத்தையே ஒத்துக் கொள்ளாமல் ஓவியர் எம்.எஃப் உசேனை நாட்டைவிட்டே விரட்டியது பாஜக வின் உறவு முறையினரான சங் பரிவாரம். ஏதோஒரு கூட்டத்தில் நரேந்திரமோடியை விமர்சித்து விட்டார் என்பதற்காக சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கே நேரில் சென்று மிரட்டி திரு. வீரபாண்டியன் விவாத மேடை நிகழ்ச்சியில் முகம் காட் டாமல் செய்த ‘சுதந்திரவான்கள்’ தான் பாஜகவினர். கருத்து சுதந்திரத்தைக் காலில் போட்டு துவைத் தெடுக்கும் இவர்கள் 2003 ஆம் ஆண்டில் என்னசொன்னார்கள்? பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சட்ட அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி கருத்துக்கணிப்புக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று யோசனை கூறினார்.

இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊடகங்களைத் தங்க ளின் கைப்பாவைகளாக மாற்றி ஆட்டுவிப்பதால் அது நரேந்திர மோடி பலூனை ஊதி ஊதி பெரிய தாக்குவதால் கருத்துக் கணிப்பெனும் திணிப்பு தொடரட்டும் என வக்காலத்து வாங்குகிறது.கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது ஊடக சுதந்திரம் என்று அவ்வப்போது குரல் எழுவதுஇயல்புதான். எந்த சுதந்திரமும் எல்லைகள் அற்றதாக இருக்கமுடியாது. 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குப் பின்னும் வெளியிடப்பட்டு வந்தது. இந்த விஷயத்தில் பொதுக்கருத்து உரு வாக்கப்பட்டு வாக்களித்தபின் கருத்துக்கணிப்பு நடத்தத் தடையில்லை; ஆனால் அனைத்துக் கட்டத் தேர்தலும் முடிந்த பிறகுதான் அதன் விவரங்களை வெளியிடவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி ஊடக சுதந்திரம் இந்த விஷயத்தில் ஒரு வரம்புக்கு உட்படுத்தப்பட்டது.அதேபோல்தான் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் வரையறை செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான கட்சிகளின் யோசனை. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் கருத்து ஆழ்ந்த சிந்தனைக்குரியது. தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தும் நிறுவனம் எது? அந்நிறுவனம் பின்பற்றிவரும் நடைமுறை என்ன? அதன் அனுபவம் என்ன? என்பது போன்றவிவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன்- அதாவது தேர்தல் பற்றிய அறிவிப்பை தேர்தல் -ஆணையம் வெளியிட்டவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது என்பது போலவே கருத்துக் கணிப்பு களை ஒரு சார்பாக வெளியிடும் வாய்ப்புகள் பெருகிவருகின்றன.இதற்கு கண்கூடான உதாரணம், சி வோட் டர்ஸ் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு கட்சிக்கு ஏற்ப விலை பேசப்பட்டதை இன்னொரு ஊடகம் அம்பலப்படுத்தியது. அதன் காரணமாக அந்தக் கருத்துக்கணிப்பே வெளியிடப்படாமல் குப்பைக் கூடையில் வீசப்பட்டது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் வரை கருத்துக்கணிப்புகள் நடத்தலாம். அதுவும் கட்சி, கொள்கைகள், செயல்பாடுகள் சார்ந்ததாக இருப்பது ஆரோக்கியமான நடைமுறையாகும். தனிநபர்களை முன்வைத்து நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் மாயத்தோற்றத்தை உருவாக்குவதோடு எதேச்சதிகாரத்திற்கும் இட்டுச் செல்லும்.மற்றொன்று தேர்தல் களத்தில் கட்சிகளின் அணிகள், தேர்தல் அறிக்கைகள், தலைவர்களின் பொதுப்பிரச்சாரங்கள், தொண்டர்களின் மக்கள் சந்திப்புகள் போன்றவை யாருக்கு வாக்க ளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந் திரத்தை வழங்கும்.

அந்தச்சுதந்திரத்திற்கு இடம்அளிக்காமல் 9கட்டத் தேர்தலுக்கும் இடை இடையே வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் திணிப்புகளாக மட்டுமின்றி வாக்காளர்களின் யோசிக்கும் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் அமைந்துவிடும். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகங்களே அதன் ஊச லாட்டத்திற்கும் காரணமாகிவிடக் கூடாது என்று வாக்காளர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.