துபாயில் இருந்து சென்னைக்கு பால் பவுடரில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்த ஆந்திர வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆந்திர வாலிபர்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து நேற்று அதிகாலை விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ஆந்திராவை சேர்ந்த அப்துல் யூசுப்(வயது 38) என்பவர் அந்த விமானத்தில் வந்திறங்கினார். அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்த போது அவர் சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு சென்னை திரும்பி வருவது தெரிந்தது.
ரூ.60 லட்சம் தங்க கட்டிகள்
இதனால் அப்துல் யூசுப் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் இருந்த உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் 10 பால் பவுடர் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் 20 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக அப்துல் யூசுப்பை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவருக்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment