இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், ‘பொது தேர்தல் 2014’ என்ற தமிழாக்கம் செய்யப்பட்ட கையேடு சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
பொதுத் தேர்தல் 2014
இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், ‘‘பொதுத் தேர்தல் 2014’’ என்ற தேர்தல் கையேட்டை தொகுத்துள்ளது. இந்த கையேட்டில், பொது தேர்தல் பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ஆங்கில பதிப்பு டெல்லியில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலக தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நேற்று மாலை, ‘பொதுத் தேர்தல் 2014’ கையேடு தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. 340 பக்கங்கள் கொண்ட இந்த கையேட்டை, பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் நிர்வாக இயக்குனர் கே.எம்.ரவீந்திரன் வெளியிட, இணை தலைமை தேர்தல் அதிகாரி ஏ.சிவஞானம், பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் எம்.வி.பிரசாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
புள்ளி விவரங்கள்
இந்த தேர்தல் கையேட்டில், பொதுத் தேர்தல்கள் பற்றிய பல்வேறு அம்சங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் அனைவரும் பங்கேற்க வகை செய்யும் முயற்சிகள், அழிக்க முடியாத மை, கை விரலில் அடையாளம், பெருமைமிக்கத் தருணம், மாதிரி நடத்தை கோட்பாடுகள் போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் பற்றிய புள்ளி விவரங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதுடன், 2004 மற்றும் 2009 தேர்தலையும் ஒப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுதந்திரத்திற்கு பிறகு நடந்த அனைத்து பொதுத் தேர்தல் பற்றிய புள்ளி விவரங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த புத்தகம் பொதுமக்களுக்கு விற்பனைக்கு கிடைக்காது என்றாலும், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணைய தளத்தில் (www.pibchennai.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் 84 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள்
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2014 குறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள கையேட்டில், நாடு முழுவதும் 81 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும், தேர்தலுக்காக 9 லட்சத்து 19 ஆயிரம் வாக்குசாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 35 லட்சத்து 28 ஆயிரம் வாக்கு எந்திரங்களும் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும், வேட்பாளர்கள் யாரும் பிடிக்கவில்லை என்றால், ‘நோட்டா’ பட்டனை அழுத்தி கருத்து தெரிவிக்கும் வசதி இந்த தேர்தலில் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற வசதி பிரான்ஸ், பெல்ஜியம், கிரீஸ், பிரேசில், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கிறது. ‘நோட்டா’ வசதியை அறிமுகம் செய்துள்ள 12–வது நாடு இந்தியா ஆகும்.
No comments:
Post a Comment