லோக்சபா தேர்தல்: திமுக அணியில் முஸ்லிம் லீக், மனிநேய மக்கள் கட்சி, புதிய தமிழகத்துக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக தரப்பில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஐவர் குழு இப்பேச்சுவார்த்தையை நடத்தியது.
முஸ்லிம் லீக்குக்கு ஒரு தொகுதி
இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடவும் முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து இதர கட்சிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை
மாலையில் மனித நேய மக்கள் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மயிலாடுதுறை தொகுதியில் அக்கட்சி போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சிக்கு தென்காட்சி
இதேபோல் திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment