சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம், தறித்தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு பூங்கொடி (வயது 10), பூஞ்சோலை (1) என 2 மகள்களும், பூபதி (4) என்ற மகனும் இருந்தனர். பூங்கொடி சென்றாயம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் பரமசிவம், பழனியம்மாள், சிறுமி பூங்கொடி உள்பட அனைவரும் படுத்து தூங்கினார்கள். நேற்று முன்தினம் காலையில் எழுந்து பார்த்த போது சிறுமி பூங்கொடியை காணவில்லை. இதனால் பரமசிவம் பக்கத்து வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால், எங்கு தேடியும் பூங்கொடி கிடைக்கவில்லை.
இதனிடையே, சென்றாயன்பாளையம் மலையடிவார கரட்டுப்பகுதியில் இருந்த ஆலமரத்தில் ஒரு சிறுமி நிர்வாண நிலையில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்குவதாக பரமசிவத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே, பரமசிவம் மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது அது சிறுமி பூங்கொடிதான் என்று தெரியவந்தது. இதை கண்டு பரமசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதார்கள்.
இதுகுறித்து வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சிறுமியின் உடலில் ரத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. எனவே, அவளை யாரேனும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே, சிறுமியை கொன்றவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறிய அவர்கள், சிறுமி பூங்கொடியின் உடலை போலீசார் கைப்பற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கொலையாளிகளை கண்டுபிடிக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி கூறினார்கள்.
இதையடுத்து போலீசார் சிறுமி பூங்கொடியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கற்பழிக்கப்பட்டதை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகளை அதிகாரிகள் அமைத்து உள்ளனர்.
No comments:
Post a Comment