மும்பையில் ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பரிடம் நூதன முறையில் இரண்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தீபக் செதியா, வயது 32. இவரது நண்பர் சிரில் ஒகேகே(29). நைஜீரியாவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. டி.எஸ். பால் இ.மெயிலை முடக்கினர்.
பின்னர் அவர்கள் பாலின் இமெயில் முகவரியில் இருந்து அவரது நண்பரின் இ.மெயில் முகவரிக்கு, நான் அமெரிக்காவுக்கு சுற்றுலா வந்தபோது எனது பாஸ்போர்ட் மற்றும் உடைமைகள் தொலைந்து விட்டது. எனவே குறிப்பிட்ட வங்கி கணக்கில் எனக்கு பணம் போடும் படி பால் கேட்டுக்கொண்டது போல் இமெயில் அனுப்பினர்.
பாலின் இ.மெயில் முகவரியில் இருந்து வந்த செய்தியை பார்த்த பாலின் நண்பர் அதை உண்மை என நம்பி உடனே அந்த வங்கி கணக்கிற்கு ரூ.2½ லட்சம் டெபாசிட் செய்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாலை சந்தித்த அவரது நண்பர் அமெரிக்காவில் உடைமைகளை தொலைத்தது குறித்து கேட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பால் தான் அமெரிக்காவிற்கு செல்லவில்லை என்றார்.
இதையடுத்து தன் இ.மெயிலை முடக்கி யாரோ மோசடியில் ஈடுபட்டதை உணர்ந்த பால், இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய மும்பை போலீசார் தீபக் செதியா மற்றும் அவரது கூட்டாளி சிரில் ஒகேகேவை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், செக் புத்தகம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் இதுபோன்று பலரின் இ.மெயிலை முடக்கி சுமார் ரூ.80 லட்சம் வரையில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment