சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை - நெல்லூர் நெடுஞ்சாலை பஞ்செட்டி போரக்ஸ் நகரில் உள்ள எல்.கே.எஸ். திருமண மண்டபத்தில் தேமுதிக செயற்குழு- பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் நடைபெறவுள்ள தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், தேர்தல் கூட்டணி ஆகியவை குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிபந்தனைகள்-செல்போனுக்கு தடை இந்த கூட்டம் தொடர்பாக கட்சியினர் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து கட்சியின் தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
செயற்குழு-பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க தலைமை நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கட்சியின் துணை அமைப்புகளைச் சேர்ந்த செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கர்நாடகம், மகாராஷ்டிரம், டெல்லி, புதுச்சேரி, அந்தமான், கேரளம் ஆகிய மாநிலங்களின் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ஆகியோர் அந்தந்த மாவட்டச் செயலாளரிடம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
செல்போன், கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருள்களை உள்ளே கொண்டுவர அனுமதி இல்லை. கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு யாரும் சால்வை, மாலை அணிவிக்கக் கூடாது. பூங்கொத்து அளிக்கக் கூடாது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment