தமிழகத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்படவும் உரிமைகள் நிலைநாட்டப்படவும் வேண்டும் என்றால், மத்திய அரசை வழிநடத்தும் அதிகாரம் நமது கைக்கு வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, டானிங்டனில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே, அவரது உருவப் படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிட, போக்குவரத்துத் துறை அமைச்சர் வ.செந்தில் பாலாஜி பெற்றுக் கொண்டார். பின்னர் கட்சித் தொண்டர்களிடையே முதல்வர் ஜெயலலிதா பேசியது:
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சியை தனது குடும்பச் சொத்தாக்கி, அண்ணாவின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, முதல்வர் பதவியைப் பெற்றுக் கொடுத்த எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து வெளியேற்றிய கருணாநிதியை அரசியலை விட்டே ஒழித்துக் கட்டுவதற்காக துவக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக.
கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து 2013 மார்ச் வரை 17 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியே வந்தாலும் காங்கிரசுடன் இப்போதும் உறவாடிக் கொண்டிருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி.
17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுகவால் தமிழகத்துக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் நாட்டையே சுரண்டியவர்கள்தான் கருணாநிதியின் குடும்பத்தினரும் திமுகவினரும்.
இலங்கைப் பிரச்சனையை பெயரளவுக்குக் காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சியுடன் “ஒட்டும் இல்லை, உறவும் இல்லை’ என்று தெரிவித்து, கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளிவந்தார் கருணாநிதி. பிறகு காங்கிரஸ் கட்சியின் தயவில் தனது மகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார்.
ஆட்சி முடியும் தருவாயில், இதுநாள் வரை தான் அங்கம் வகித்த ஆட்சிக்கு தலைமை தாங்கிய கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தவுடன் வெளியேறுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை.
அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார். இந்த நிலைப்பாட்டிலும் அவர் உறுதியாக இல்லை. ஏதாவது சிறிய கட்சிகள் தடுமாறித் தள்ளாடி தன் வலையில் வந்து விழுமா என்று காத்துக் கொண்டிருக்கிறார். வலையில் எதுவும் சிக்கவில்லை என்றால் மீண்டும் காங்கிரஸýடன் கூட்டணி வைப்பதற்கும் அவர் தயங்க மாட்டார்.
காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர்கள் விவகாரம், தமிழகத்துக்கு மின்சாரம் ஒதுக்குவது குறித்த பிரச்னை, கச்சத்தீவு குறித்த பிரச்னை, ஈழத்தமிழர்கள் பாதிப்பு உள்ளிட்ட எந்தப் பிரச்னையிலும் மத்திய காங்கிரஸ் அரசு தமிழக மக்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் தனது தவறான கொள்கைகள் மூலம், பெட்ரோல், டீசல், விலை உயர்வு, அனைத்துப் பொருள்களின் விலைவாசி உயர்வு, விவசாய விரோத கொள்கை, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்து, பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாகச் செயல்படும் மத்திய காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.
தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காத வகையில் நமது களப்பணி அமைய வேண்டும்.
தமிழகத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்படவும், உரிமைகள் நிலைநாட்டப்படவும் வேண்டும் என்றால், மத்திய அரசை வழிநடத்தும் அதிகாரம் நமது கைக்கு வர வேண்டும். இதனை மனதில் நிலைநிறுத்தி, “நாற்பதும் நமதே’ என்ற இலக்கை அடைய இன்று முதல் அயராது உழைக்க வேண்டும். உங்களோடு இணைந்து நானும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்ய உள்ளேன் என்று ஜெயலலிதா பேசினார்.
No comments:
Post a Comment