ஆம் ஆத்மி கட்சி விரும்பினால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி. கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுள்ள அக்கட்சி, தற்போது வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்து செயல் பட்டு வருகிறது.
அதன் படி, டெல்லி தவிர பிற மாநிலங்களிலும் தனது கட்சியை வேரூன்றச் செய்யும் முயற்சிகளில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் சார்பில் பிரதம வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் நிறுத்தப் படுவார் என எதிர்பார்க்கப் பட்ட வேளையில், ‘நாடாளுமன்ற தேர்தலில் நானோ அல்லது எனது கட்சி எம்.எல்.ஏ.க்களோ போட்டியிடமாட்டோம்’ என அதிரடியாக அறிவித்தார் கெஜ்ரிவால்.
ஆனால், கெஜ்ரிவாலை போட்டியிட வைக்கும் முடிவில் ஆம் ஆத்மி கட்சி உள்ளது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கும் வகையில் சில தினங்களுக்கு முன்னர், ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், கட்சி விரும்பினால் போட்டியிடுவேன் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், இனிவரும் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment