Latest News

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியே!​

1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் (நவ. 27 - டிச. 1) போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலையுண்ட பிறகு  அமைதி பூங்காவாம் தமிழகத்தின் கோவை மாநகரில், ஒரு இன அழிப்புக்கான முன்னோட்டம் நடைபெற்றது என்பதை தமிழக மக்கள் எளிதில் மறந்திருக்க முடியாது.
அதுவரை தமிழகம் கண்டிராத அது போன்ற பெரும் கலவரம் தமிழக மக்கள் மத்தியில் ஒரு பெரும் பீதியையும் பதட்டத்தையும் உருவாக்கியது. காலம் காலமாக இராமரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத கும்பல் காவல்துறையோடு கைகோர்த்துக் கொண்டு அங்கு வாழும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்!

கலவரம் நடந்த அந்த ஐந்து நாட்களில் மட்டும் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், கோடிக்கணக்கில் அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டதும், வீடுகள் மற்றும் கடைகள் அடையாளம் இடப்பட்டு தீக்கிரயாக்கப்பட்டதும் காவி முகம் கொண்டுள்ள நம் ஊடகங்களில் அதிகமாக வந்திருக்க வாய்ப்பில்லை.

அக்கலவரத்திற்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தூக்கிப் பிடிக்கும் ஊடகங்கள், காவிகளின் கைகளில் விளையாட்டு பொம்மைகளாக இருப்பதினால் காவிகளால் படுகொலை செய்யப்பட்ட அந்த 19 பேர்களைப் பற்றியோ, கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்ட விவரங்களையோ அதிகமாக மறைத்தே வெளியிட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.   
கொலையுண்ட 19 முஸ்லிம்களின் குடும்பங்கள் பதினாறு ஆண்டுகளாகியும் நீதிக்காக ஏங்கி நிற்கும் சூழல் மட்டுமே இன்றும் நிலவுகிறது. திட்டமிட்டு நடத்தப்பட்ட அக்கலவரத்தில் கொல்லப்பட்ட இம்மக்களை பற்றி கொஞ்சநஞ்சம் முணுமுணுத்த மீடியாக்கள்கூட, மூன்று மாதத்திற்குப் பின்னர் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினால் மழுங்கிப் போனது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும்  மாற்று கருத்து இல்லை. அதற்கேற்ப நூற்றுக்கு மேற்பட்டோர் சுமார் 10 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் ஜாமீன் கூட வழங்கப்படாமல் சிறையிட்டும் அவ்வழக்கிலேயே தண்டனை தீர்ப்பும் வந்து முடிந்துவிட்டது.
ஆனால், அக்குண்டுவெடிப்பு நடப்பதற்குக் காரணமான அதற்கு முன்னர் நடந்த, 19 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட கலவரத்தின் சூத்திரதாரிகளான காவி குற்றவாளிகளுக்குத் தண்டனை எப்போது?
ஒரு சம்பவம் பெரிதாக நடந்த பின்னர் அதற்கு முன்பு நடந்த இனப்படுகொலைக்கு தீர்வு இல்லாமலும், அலட்சியப்படுத்தப்படுவதும், சரியான குற்றவாளிகளை மறு விசாரணை மூலம் கைது செய்யாமல் அக்கொலை வழக்கிற்கே முற்றுப்புள்ளி வைப்பதும் பெரும் குற்றமாகும்.
நவம்பர் 97 கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் காவல்துறையும், ஹிந்து முன்னணியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கலவரத்திற்கு பின்னர் டிசம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை புதுவை சுகுமாரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட PUCL (Peoples Union for Civil Liberties) பன்னிரண்டு பேர் கொண்ட குழு அதனை உறுதி செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
கலவரத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளைக் காவல் துறை வேண்டுமென்றே கைது செய்யாமல், அப்பாவி இந்து மக்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததன் விளைவுகளினாலும், சரியான முறையில் குற்றப்பத்திரிகை மற்றும் சாட்சிகளை முன்நிறுத்தாததின் காரணத்தினாலும் உயர்நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஒருவர் கூட எப்படி தண்டிக்கப்படவில்லையோ அதேபோல் கோவை கலவரத்திலும் அதில் கொல்லப்பட்ட 19 அப்பாவிகளின் கொலை வழக்கிலும் யாரும் தண்டிக்கப்படவில்லை. அப்படியென்றால் இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் யார்? எங்கே? போன்ற வினாவிற்கு விடை தெரியாமல் இன்றும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பாவிகளாக வாழும் அவர்களின் குடும்பத்திற்கு நாம் என்ன பதில் வைத்து இருக்கின்றோம்?

காவலர் செல்வராஜைக் கொலை செய்தது முஸ்லிம்கள் என்று வைத்துக் கொண்டால்கூட அதற்காக வீதிகளில் சென்ற அப்பாவி முஸ்லிம்களையெல்லாம் கொலை செய்ததை எப்படி நியாயப்படுத்த முடியும்? (காவலர் செல்வராஜ் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.).

தமிழக வரலாற்றில் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதுவே முதன் முறையாக இருக்கும் என நினைக்கின்றேன். கலவரத்தை முன்னின்று நடத்தியதே காவல்துறையாக இருக்க கைது நடவடிக்கையில் உண்மை குற்றவாளிகள் எவ்வாறு கைது செய்யப்படுவார்கள்? இது அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றத்துக்குத் தெரியாதா?

இன்று தேவயானி கைதுக்காக வீதிகளில் போராட களமிறங்கும் இஸ்லாமிய இயக்கங்கள், கொல்லப்பட்ட 19 அப்பாவி முஸ்லிம்களின் வழக்கை சிபிஐ கொண்டு மறுவிசாரணை செய்திட வேண்டும் என போராடதது ஏன் என்று புரியவில்லை. விடை தெரியாமல் நிற்கும் அவர்களின் குடும்பங்களுக்கு நீதி வேண்டி இனியாவது அப்படி ஒரு போராட்டம் நடக்குமா என பொறுத்திருந்து பாப்போம்.
பூவை அன்ஸாரி
Thanks: www.inneram.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.