Latest News

குஜராத் ஐபிஎஸ் அதிகாரியின் டைரி...... அவசியம் வாசியுங்கள்... !

அந்த இளம்பெண் உற்சாகத்துடன் “அங்கிள், அவனுங்க தங்கி இருக்கின்ற இடத்தில் இருந்து புகைவர்றதைப் பார்த்தீங்களா, எல்லோரும் எரிஞ்சிருப்பானுக... செத்திருப்பானுக...”"""".
 மலையாள மனோரமா 2008 ஆம் ஆண்டு ஓணம் சிறப்பிதழில் வெளிவந்து பலத்த அதிவுகளை ஏற்படுத்திய பேட்டிக் கட்டுரையின் தமிழாக்கம் இது.
2002 பிப்ரவரி 28. அகமதாபாத்தில் ஆயுதப்படையின் கூடுதல் டி.ஜி.பி.யாக நான் இருந்தேன். குஜராத்தில் முக்கிய நகரங்களில் இனக்கலவரம் வெடிக்கத் துவங்கியிருந்தது. மாடியின் மேல் நின்று அகமதாபாத் நகரத்தை மனம் துடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம் நானும் என் மகள் தீபாவும். முஸ்லீம்கள் வசிக்கின்ற குடியிருப்புகளில் இருந்து நெருப்பும் கடும்புகையும் எழுவதைக் காணமுடிகிறது. அதே குடியிருப்பில் வசிக்கின்ற இன்னொரு காவல்துறை அதிகாரியின் மகளும் எங்களுடன் இருந்தாள். அந்த இளம்பெண் உற்சாகத்துடன் “அங்கிள், அவனுங்க தங்கி இருக்கின்ற இடத்தில் இருந்து புகைவர்றதைப் பார்த்தீங்களா, எல்லோரும் எரிஞ்சிருப்பானுக... செத்திருப்பானுக...”.
இருபத்திரண்டு வயதுள்ள அந்தப் பெண்ணின் முகத்தை அதிர்ச்சியுடன் நான் பார்த்தேன். அன்று இரவு என்னால் தூங்கமுடியவில்லை. அன்று மட்டுமல்ல. தொடர்ந்து வந்த பல தினங்களிலும். நரோதா பாட்யாவிலும், பிணங்கள் வரிசையாகப் படுக்கவைக்கப்பட்டிருந்த பொது மருத்துவமனையிலும் அடுத்த தினங்களில் நான் கண்ட காட்சிகள்... பெண்களை மானபங்கம் செய்தபின் அவர்களின் உடல்களை பல்வேறு முறைகளில் அவமானப்படுத்தியிருக்கின்றனர். 1979 முதல் ஒன்றரை வருடங்கள் அகமதாபாத் காவல்துறை கமிஷனராக நான் இருந்ததனால் முஸ்லீம்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள் அனைத்தும் எனக்கு நன்கு தெரிந்தவைகளாக இருந்தன. எல்லா இடங்களும் இப்போது மயானங்கள்.
என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டது “நீ பெரிய அடிஷனல் டி.ஜி.பி தானே? என்ன செய்யமுடிந்தது உன்னால்?”
குஜராத்திலுள்ள பூஜ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பத்தாயிரக்கணக்கான பிணக்குவியல்களுக்கு நடுவில் நின்று மீட்புப்பணிகளுக்குத் தலைமை தாங்கியிருக்கிறேன். பலமுறை இனக் கலவரங்களை அடக்கி ஒடுக்கிய அனுபவமும் இருக்கிறது. ஆனால் இங்கே நான் தடுமாறி விட்டேன்.
கலவரத்தின் ஆரம்பநாட்களில் எதுவுமே செய்யமுடியாமல் செயலற்ற நிலையில் நான் இருந்ததால் நான் என் மனத்துயரை வழக்கறிஞர் ஆக இருந்த என் மகள் தீபாவுடன் பகிர்ந்து கொண்டேன். இறுதியில் எல்லாவற்றையும் என் டயரியில் குறித்தும் வைத்தேன்.
எல்லாம் ஒரு செயலிழந்தவனின் நினைவுக் குறிப்புகள்.
கலவரம் 2002. பிப்ரவரி 27.
மதியம் டி.ஜி.பி கே. சக்கரவர்த்தி என்னை அழைத்தார். “ஸ்ரீகுமார், பெரும் பிரச்சினை துவங்கிவிட்டது. சீருடை அணியும் அதிகாரம் இருக்கின்ற அனைவரையும் தயார் நிலையில் இருக்கச்சொல்லுங்கள். லீவ் அனைத்தும் கேன்சல் செய்யுங்கள். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்!”
அன்று காலையில்தான் கோத்ரா சம்பவம் நடந்திருந்தது. சபர்மதி எக்ஸ் பிரஸ் கோத்ரா ரெயில் நிலையத்தில் தீப்பிடித்தது. விபத்தில் 59 பேர் வெந்து மடிந்தனர். எனக்கு 11 பட்டாலியன்களின் பொறுப்பு இருந்தது. உடனடியாக எனக்குக் கீழே இருக்கின்ற காவல்படைக்கு ஆயத்தமா வதற்கான ஆணைகளை வழங்கினேன். சக்கரவர்த்தி நல்ல மனிதனாக இருந்தார். அதுதான் அவருடைய பிரச்சினையும். ஊழல் இல்லை, மதுப் பழக்கமில்லை. சராசரி போலீஸ்காரர்களின் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. ஆனால் நெருக்கடிகளை சமாளிக்க அவரால் முடியாது. அமைதி நிலவும் காலத்து டி.ஜி.பியாக இருக்கமட்டும்தான் அவரால் இயலும்.
மீண்டும் சக்கரவர்த்தி என்னை அழைத்தபோது கூறினார், “கோத்ரா சம்பவம் எதேச்சையாக நிகழ்ந்ததாயிருக்கலாம்; ஒரு வேளை பரஸ்பரம் மோதும்போது நிகழ்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், ஸ்ரீகுமார்... உங்களுடைய சென்ட்ரல் இன்டலி ஜென்ஸ் பியூரோவைச் சேர்ந்தவர்கள், இது முன்கூட்டி திட்டமிட்ட சதி என்று கருதி விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்கள்.
நான் நீண்டகாலம் C.I.B. யில் பணியாற்றி இருந்ததனால் கிண்டலாய் “உங்களுடைய இன்டலிஜென்ஸ் ஆட்கள்” என்றுதான் அவர் கூறுவார்.
“சார் அப்படிச் செய்யக்கூடாது. நம்மைப்போன்ற போலீசார் நியாயமாகவும் திறந்த மனதுடனும் நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும்'' என்று நான் கூறினேன்.
தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அது சதித்திட்டம் இல்லை என்றும், இராம பக்தர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்புத் தகராறுதான் என்றும் அவர் சொன்னார். முகமதியர்கள் வலுவான செல்வாக்குள்ள பகுதி கோத்ரா.
எஸ்-6 ரெயில் பெட்டியில் பயணித்த நபர்கள் வரும் வழியில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் கீழிறங்கி வியாபாரிகளையும் மற்றவர்களையும் கொள்ளையடித்தனர் என்று தகவல். இராம பக்தர்களாக இருந்தாலும், இளைஞர் காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்தல் என்பது தானே நமது பண்பாடு? கோத்ராவில் வியாபாரிகளில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்களாக இருந்தனர். அதுவுமின்றி ஓரு முஸ்லீம் இளம் பெண்ணைக் கடத்திச்சென்றதாகவும் வதந்தி பரவியது. இவையெல்லாம் தான் கோத்ரா சம்பவத்துக்கு வழி வகுத்திருந்தன.
மாலை ஐந்து மணி அளவில் டில்லியில் இருந்து அப்போதைய துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அத்வானியின் அறிக்கை ஊடகங்களில் வெளியாயிற்று. “இந்த நிகழ்ச்சி பாகிஸ்தானின் சதித்திட்டம்.” இப்போது தெளிவாகிவிட்டது, உளவுத்துறைதான் இதன் பின்னால் என்று. அன்றைய ஓர் இணை இயக்குநராக இருந்த ராஜேந்திரகுமார் என்பவர்தான் இதன் பின்னணியாகச் செயல்பட்டவர் என்றும் டி.ஜி.பி கூறினார். நான் டி.ஜி.பி. யிடம் சொன்னேன். “சார் அடுத்த மீட்டிங்கிற்கு நீங்க போகும்போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நான் நேரடியாக ராஜேந்திரகுமாரிடம் இதைப்பற்றிக் கேட்கிறேன், எதன் அடிப்படையில் இப்படிச் சொன்னீர்கள் என்று. எங்கிருந்து தடயங்கள் கிடைத்தன. நம் ஒற்றர்கள் யாரேனும் தந்தார்களா என்று.” டி.ஜி.பி. உடனே இராஜேந்திரகுமாரை அழைத்துக் கேட்டார். இராஜேந்திரகுமார் அளித்த விளக்கங்கள் ‘பிரமாதமானவையாக’ இருந்தன. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஓரிரு தொலைபேசி அழைப்புகள் போயிருக்கிறதாம்.
எது உண்மை? கோத்ரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலும் சுற்றுவட்டாரங்களிலும் திருமணம் செய்துள்ளவர்கள். இவர்கள் ‘ஹாச்சி முஸ்லீம்கள்’. சுல்தான் மற்றும் நவாபுகளின் படைவீரர்களாக இருந்தவர்கள் இவர்கள். கேரளாவில் பழைய நாயர்பட்டாளம் என்று சொல்வோமில்லையா. நாயர்களும் மற்றவர்களும் கல்வி மற்றும் வேலை தேடி ஏனைய துறைகளுக்குள் புகுந்ததுபோல் இவர்களால் முடியவில்லை. காலனி ஆட்சி ஏற்பட்டு தொழில் இழந்தவர்களான பின்னர் இவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர், வழிப்பறிக்காரர்களாகவும், கிரிமினல்களாகவும் உருவாகினர். இதுதான் உண்மையான வரலாறு.
வி.எச்.பி.யினரும், சங்கபரிவாரைச் சேர்ந்தவர்களும் 27ஆம் தேதி மாலை கடையடைப்புக்கு அறைகூவல் விடுத்தனர். மறுநாள் செய்தித்தாள்களில் கலவரம் துவங்குவதன் அறிகுறிகள் முன்கூட்டியே செய்திகளாக வெளி வந்தன. மறுநாள் டி.ஜி.பியை நான் சந்தித்தபோது அவர் மிகவும் சோர்ந்து போயிருந்தார். அவர் சொன்னார் “சம்பவங்கள் மிகவும் பரிதாபகரமான நிலையை நோக்கிப் போகிறது. நான் எதுவும் செய்ய முடியாமலிருக்கிறேன். எனக்குக் கவலையாக இருக்கிறது.”
அவர் விளக்கிக் கூறினார். 27ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு சீப் செக்கரட்டரி ஜி.சுப்பாராவ், டி.ஜி.பி.சக்கரவர்த்தி, அகமதாபாத் சிட்டி கமிஷனர் (இவர் தற்போது குஜராத் காவல்துறை தலைவராக இருக்கிறார்) பி.சி. பாண்டே, அடிசனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன், முதல் அமைச்சரின் சிறப்பு செயலாளர் பி.சி.மிஸ்ரா (இப்போது இவர் மத்திய அமைச்சர் சரத்பவாரின் செயலாளர். இவர் ஆட்சித்தலைமைக்கு உயர்த்தப்பட்டதை கவனிக்கவும்) இவர்கள் அனை வரும் சேர்ந்து முதல் அமைச்சரின் முன்னிலையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் முதல்வர் கூறினார். “இந்து மக்களைப் பொறுத்தமட்டில் மிகவும் துரதிருஷ்டவசமான, வேதனை நிறைந்த விஷயங்கள்தான் நடந்து இருப்பவை. சாதாரண நிலையில் நீங்கள், ஒரு இனக் கலவரம் வெடிக்கும் போது இந்துக்களையும், முஸ்லீம்களையும் சரிசமமாகக் கைது செய்வீர்கள். அந்த நடைமுறை இங்கு எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது. மூன்று நாட்களுக்கு இங்கு இந்துக்களின் பழிவாங்கும் நெருப்பு பொங்கி எழும். யாரும் அதைக் கண்டுகொள்ளவும் கூடாது, அதில் தலையிடவும்கூடாது. இது என் பிரத்தியேகமான உத்தரவு.”
அதற்கு யாரும் பதில் கூறவில்லை “சார், கலவரம் நடைபெற்றால் அதில் தலையிடாமல் இருக்க முடியாது. எங்களுக்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது!” என்று ஒருவராவது கூறியிருக்கலாம். முதலமைச்சரின் முகத்தை நோக்கி மறுத்துக்கூற சிலருக்குத் தயக்கம் இருந்திருக்கலாம். இருப்பினும் வெளியில் வந்தபிறகு தங்களின் கடமையை, நாணயமாக அவர்கள் மேற்கொண்டிருக்கவேண்டும். அதையும் அவர்கள் செய்யவில்லை.
நகரபோலீஸ் கமிஷனர் பி.சி பாண்டே 27ஆம் தேதி தனக்குக் கீழே உள்ள அதிகாரிகளை அழைத்து இனக் கலவரத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இனக் கலவரங்களை எதிர்கொள்வதற்கான கட்டளைகளையும் அவர் அளித்திருந்தார். அதற்குப் பிறகுதான் முதலமைச்சரின் தலைமையிலான மேற்குறிப்பிட்ட கூட்டம் நடைபெற்றது.
காவல்துறையினரால் வகுப்புவாத மோதல்களை மிகத் துரிதமாகவும் முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலும் எதிர்கொள்ளமுடியும். அந்த அளவிற்கு திறன் வாய்ந்த வகையில் சட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. ஒரு சர்ஜன் எந்த அளவுக்கு நுணுக்கத்துடன் அறுவை சிகிச்சையை செய்து முடிக்கிறாரோ அதுபோன்றுதான் காவல்துறையினர் கலவரங்களை அடக்குவதும். ஒரு கணபதி ஹோமம் எப்படி நடத்துவீர்கள் என்று பூஜாரியிடம் கேட்டால் ஹோமத்தின் துவக்கம் முதல் இறுதிவரை செய்ய வேண்டியதை வரையறுத்துக் கூறிவிடுவார். அவ்வளவு துல்லியமானதுதான் கலவரத்தை அடக்கும் காவல்துறையின் திட்டமும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டாம் என்று இவர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். மதியம் மோதலை ஒடுக்குவதற்குத் தேவையான ஆணைகளை அளித்திருந்த பி.சி.பாண்டே, இந்தக் கூட்டத்திற்குபின் தனது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இவ்வாறாக முதலமைச்சர் நரேந்திரமோடியின் தலைமையில் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்படுத்தியவைதான் குஜராத்தில் அரங்கேறியவை. இந்துக்கள் அக்கிரமச் செயலில் ஈடுபடுவார்கள், அவர்களுக்கு எதிராக நீங்கள் யாரும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற உத்தரவு கொடுத்தபோதே 120-பியின் படி (குற்றம் புரிவதற்கான இரகசிய ஆலோசனை) நரேந்திரமோடி கிரிமினல் குற்றம் புரிந்தவர் ஆகிறார்.
அன்றைய இரவே அதிகாரிகள் அந்த இரகசிய ஆலோசனையை நடைமுறைபடுத்தத் துவங்கினர். ‘சர்குலர் ஆப் கம்யூனல் பீஸ்’ என்ற சிற்றேட்டில் சொல்லியிருக்கும் விஷயங்களை முறியடிக்கும் வேலையைத்தான் அதிகாரிகள் செய்தனர். தவிர, 1997 ஆம் ஆண்டில் பொறுப்பிலிருந்த கேரளாவைச் சேர்ந்தவரான டி.ஜி.பி. ஜோசப் என்பவர் பிரத்தியேகமாக ஒரு சிற்றேடு உருவாக்கியிருந்தார். ‘ஸ்ட்ராடஜிடு கன்ட்ரோல் அண்ட் கன்டெயின் கம்யூனல் வயலன்ஸ்.’ வகுப்புக் கலவரம் உருவாகும்போது என்னவெல்லாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிலும் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார். ஒரு சிறுவனுக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுப்பது போல் இலக்கமிட்டு அனைத்தும் அதில் அவர் சொல்லி இருக்கிறார். அதையும் இவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. அவ்வாறு இவர்களாகவே மனப்பூர்வமாக கலவரத்துக்கு சந்தர்ப்பம் உருவாக்கினர்.
அன்றைய இரவே அகமதாபாத் ரெயில் நிலையத்தில் இரண்டு முஸ்லீம்களை விஷமிகள் வெட்டிக் கொன்றனர். உத்திரபிரதேசத்தில் இருந்தோ பீகாரில் இருந்தோ வந்தவர்கள் அவர்கள். கலவரத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். முகத்தில் தாடிவைத்திருந்தனர் என்ற ஒரே காரணத்தினால்தான் நிரபராதிகளான அவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தச் செயலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் சட்டப்படி எடுக்கப்படவில்லை.
அன்று பாண்டேவுடன் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு அதிகாரி வேறொரு விஷயத்தை என்னிடம் கூறி இருந்தார். முதலமைச்சர் அக் கூட்டத்தின்போது இன்னொரு விஷயத்தையும் அழுத்தமாகக் கூறினாராம். “கோத்ராவில் இறந்த 59 பேருடைய பிணங்களையும் எரிந்துபோன ரயில்பெட்டியையும் உள்ளது உள்ள படியே கொண்டுவந்து குஜராத்திலுள்ள முக்கிய நகரங்களில் காட்சிக்கு வைக்க வேண்டும்.”
சீண்டினால் வகுப்பு மோதல் வெடிக்கும் அழுத்தமான சூழ்நிலையிலுள்ள இடங்களில் இதைக் கண் காட்சி வைத்து அரசியல் இலாபம் பெறத் திட்டமிட்ட அந்த மனிதனின் மனோதத்துவத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு அரசாங்கம் இப்படி யோசிக்கிறது! வேறெங்கும் இப்படி நடந்திருக்காது, பிரிட்டிஷ் இந்தியாவில் கூட!
ஆனால் முதுகெலும்புள்ள ஒரு பெண் அதிகாரியினால், அவர்களின் திட்டம் நடக்காமல்போனது. ஜெயந்தி ரவி என்பவர்தான் அன்றைய கோத்ரா கலெக்டராக இருந்தவர். “அது நடக்காது” என்று அவர் கூறினார்.
நமது சர்வீஸ் சட்டப்படி மாவட்ட ஆட்சியாளருக்கும், மாவட்ட போலீஸ் சூப்ரண்டிற்கும் மறுக்க முடியாத அதிகாரங்கள் இருக்கின்றன.
பல்வேறு விஷயங்களிலும் இவர்களைத் தாண்டிச் செல்ல (ஓவர் ரூல் செய்ய) மேலிடத்தில் இருப்பவர்களால் முடியாது. அதற்கான அதிகார உரிமை அவர்களுக்கு இல்லை. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பான ஒரு பக்கம் இது. இவர்களுக்கு வழங்கியுள்ள பல அதிகாரங்களை இவர்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளிக்கவில்லை. “இந்த உடல்களை தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு நிலையின் அடிப்படையில் காட்சிப் பொருளாக வைக்கக்கூடாது” என்று ஜெயந்தி ரவி முடிவு செய்தால் அதை உள்துறை செயலாளர் கூட எதிர்க்க முடியாது. நடந்ததும் அதுதான். முதலமைச்சர் மற்றும் அவர் கூட்டாளிகளின் வாய்மொழி உத்தரவுகளுக்கு ஜெயந்தி ரவி கீழ்ப்படியவில்லை. ரயில்பெட்டியை எடுத்துச் செல்லக் கூடாது என்று ஜெயந்தி ரவி எழுதிக்கொடுத்தார். அதனால் மோடியின் பல்வேறு திட்டமிட்ட சதிச்செயல்களும் நடைபெறவில்லை. ஜெயந்தி ரவி கறாராக இல்லாமல் போயிருந்தால் குஜராத் மேலும் எரிந்து போயிருக்கும். அப்படி வீரத்துடன் போராடும் பெண்மணியாக இருந்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயந்தி. கோத்ரா தீ வைப்பு பற்றி ஜெயந்தி கொடுத்த அறிக்கை, அது ஒரு எதேச்சையான சம்பவம்தான் என்று சொல்கிறது. கரசேவகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு தான் அந்த நிகழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் விளக்கமாக இருக்கின்றன.
ரயில்பெட்டியோடு விட்டுக் கொடுக்காததால் பிணங்களை மட்டும் வாகனத்தில் கொண்டு வந்து இந்தியாவிலேயே வகுப்புக் கலவரத்துக்குச் சாத்தியக்கூறு மிகுந்த பகுதியான அகமதாபாத்தின் தெருக்கள் வழியாக காட்சிப்பொருளாக பிணங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள்.
கடவுளுக்கும் மனிதனுக்கும் பொறுக்காத செயலாக இருந்தது அது. கொடூரக் குற்றவாளிகள் மட்டும் செய்யக்கூடியது. இறந்துபோனவர்களில் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் பதினாறு அல்லது பதினேழு பேர் மட்டுமே. மீதி, நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான உடல்கள் அடையாளம் தெரி யாதவை. அடையாளம் தெரியாத உடல்களை எப்படி இந்துக்களுடையது என்ற முத்திரையுடன் ஊர்வலத்தில் கொண்டுவரமுடியும்? பீகாரியாகவோ மலையாளியாகவோகூட இருக்கலாம். நெய்யாற்றின்கரையில் இறந்தவனை எடுத்துவந்து கண்ணூரில் ஊர்வலம் நடத்தினால் எப்படியிருக்கும்? முழு அடைப்பு தினத்தில்தான் இந்தப் பேரணி நடந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் தருணத்தில் காவல்துறைத் தலைவர் அந்தக் கும்பலிடம் என்ன கூறி இருக்க வேண்டும்? பிரேதங்களை முதலில் பிணக்கிடங்கில் வைக்கவேண்டும். அடையாளம் கண்டுகொண்ட பிறகு, காவல்துறை நடவடிக்கைகள் முழுக்க முடித்துவிட்டு சூழ்நிலை அமைதியான பின் ஒப்படைக்கிறோம் என்றுதானே?
நடந்தது அதுவல்ல. 1969ஆம் ஆண்டும் 1984 ஆம் ஆண்டும் வகுப்புக்கலவரம் நடந்திருக்கிறது இங்கு. வரலாற்றிலேயே சுதந்திரத்திற்குப் பின் வகுப்புக் கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கின்ற அகமதாபாத்தில் இந்தப் பேரணியை அவர்கள் நடத்தியது எதற்காக? அதன் நோக்கம் என்ன? இவர்கள்தானா இந்தியாவை நேசிப்பவர்கள்?
நன்றி :இந்நேரம்.காம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.