மனித நேய பண்பாளர் .எய்ட்ஸ் குழந்தைகளை அரவணைக்கும் மர்ஜுக் பேகம் தம்பதி
உயிர்க்கொல்லி நோய்தான், ஆனால் அது ஒன்றும் தொற்று வியாதியல்ல… இதை எத்தனை முறை அரசும், பாடப் புத்தகங்களும், விளம்பரங்களும், கதை கதையாய் சொல்லி விட்டன. ஆனால், இன்றும் எச்.ஐ.வி. பாதித்து குழந்தைகளை, தங்கள் சமூகத்தில் ஏற்க மறுக்கிறது இந்த மனிதர் கூட்டம்.
வெளியில் எதிர்ப்பவர்களில் சரி பாதிப்பேர், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது யாருக்கும் தெரியாத செய்தி. தனக்கு இந்நோய் உள்ளது எனத் தெரிந்தாலே தற்கொலை செய்துகொள்ளும் பலருக்கு மத்தியில், நிறைய பேர் மன உறுதியுடன் வாழ்கின்றனர் என, வலியின் விளிம்பில் பேசுகிறார் மர்ஜுக் பேகம்.
இவரும், இவரது கணவர் ரியாஸும் இணைந்து மெர்சி என்ற பெயரில், கோவையில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கான மையத்தை நடத்தி வருகின்றனர்.
சொத்துகள் அனைத்தும் எச்.ஐ.வி. நோயாளிகளுக்காக செலவழித்தாலும், ஏதோவொரு உந்துதலால் மனநிறைவுடன் இந்த சேவையை செய்து வருவதாக கூறுகின்றனர்.
கோவை, புலியகுளம் பெரிய விநாயகர் கோயில் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில்தான் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. 2 வயதிலிருந்து 47 வயது வரை எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட 23 பேர் இங்கு உள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு, இந்த மையத்தை ஆரம்பித்தோம். கோவை, கணபதியில் தனி வீடு எடுத்து குழந்தைகளை தங்க வைத்து கவனித்து வந்தோம். எல்லோரையும் போல, இவர்களும் மனிதர்கள் என்பதால், பள்ளிக்கும், வெளியேயும் சென்று வருவார்கள். எப்படியோ இவர்கள் அனைவரும், நோயாளிகள் என்பதை அறிந்தவுடன் வீட்டைக் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள். இனி மேலும் இவர்கள் இருந்தால், நாங்களும் இந்த நோயால் பாதிக்கப்படுவோம் என, இரவோடு, இரவாக விரட்டி விட்டனர்.
எத்தனை காசு கொடுத்தாலும் வீடு கிடைக்காது என்ற நிலைமை ஏற்பட்டது. பரந்து விரிந்து கிடக்கும், கோவை நகரில் ஈர நெஞ்சத்துடன் அரவணைக்க ஒருவர் கூட முன்வரவில்லை.
அதன்பின் அந்த இரவே, அனைத்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரமடையை அடுத்துள்ள சீலியூரில் குடியேறினோம். பிரகாஷ் என்பவர் தனது தோட்டத்து வீட்டைத் தந்து உதவினார்.
யானைகள் தொல்லை, குழந்தைகள் பள்ளிக்குப் போக முடியாது என, பல சிரமங்களுக்கு இடையேயும், அங்கு ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. அதன்பின், மாநகராட்சியில் முறையிட்டு, மேயரிடம் நேரடியாக பேசி, இறுதியாக 2013 பிப்ரவரி மாதம், எங்களுக்கு புலியகுளம் சமுதாயக் கூடம் வழங்கப்பட்டது. ரூ.16 ஆயிரம் வாடகைக்கு விடப்படும் இந்த சமுதாயக்கூடம், எங்களுக்கு ரூ.2,800க்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எங்களது குழந்தைகள் எளிதில் பள்ளிக்கும், வேலைக்கும் சென்று வர முடிகிறது என பெற்றெடுத்த தாய் போல் பேசி முடித்தார் மர்ஜுக் பேகம்.
அரசு பொதுமருத்துவமனையில் எச்.ஐ.வி. பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களை எங்களிடம் தான் அனுப்புவர். எங்களது மனமும், மனமுவந்து சிலர் வழங்கும் பணமும் இவர்களை வாழ வைத்து வருகிறது. எச்.ஐ.வி. பாதித்தவர்களுக்கு சிகிச்சை என்பது குறிப்பிட்ட காலம் மட்டுமே.
ஆனால், பராமரிப்பும், அரவணைப்புமே ஆயுளை நீடிக்கிறது. இது தொடுவதாலோ, பேசிப் பழகுவதாலோ பரவாது. அறிமுகமில்லா நபரை தொட்டுப் பேசி, கொஞ்சி மகிழும் இந்த சமூகம், அந்த நபர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிந்தால் ஒதுக்குகிறது. ஆனால், இயல்பாக பேசிப் பழகினால் போதும், நோயாளி கூட நோயை மறந்துவிடுவர். உண்மையிலேயே, எய்ட்ஸ் நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இதுதான் என்கிறார்.
சமுதாயக் கூடத்திற்குள் அவ்வளவு சுகாதாரம். ஆனால், வெளிப்பகுதியில் நிலைமை வேறாக இருந்தது. இதிலிருந்தே தெரிந்தது, இப்பகுதியிலும், இக்குழந்தைகளை அரவணைக்கும் மனங்கள் குறைவு என்பது. இனியாவது, மனமுவந்து அரவணைப்போம் இந்த குழந்தைகளை.
நன்றி : http://www.kulasaivaralaru.blogspot.in
 


 
No comments:
Post a Comment