டெல்லி: தமிழக சட்டசபையில் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், சற்றும் அதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை மத்திய அரசு. தான் திட்டமிட்டபடி இலங்கைக்குப் போவதாகவும், காமன்வெல்த் மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறியிருந்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று காலை புறப்பட்டு கொழும்பு போய்ச் சேர்ந்துள்ளார். ஐந்து நாட்கள் அவர் இலங்கையில் தங்கியிருக்கப் போகிறார். அதில் 3 நாட்கள் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்கிறார். யாழ்ப்பாணத்திற்கும் அவர் செல்வார் என்று தெரிகிறது. அங்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை அவர் சந்திப்பார் என்றும் தெரிகிறது.
பிரதமரை மாநாட்டுக்கு அனுப்பினால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மக்கள் காங்கிரஸை தனிமைப்படுத்தி விடுவர் என்பதால், அவருக்குப் பதில் குர்ஷித்தை காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் அனுப்பி வைக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தை சமாதானப்படுத்தி விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது, ஆனால், மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும், யாரையும் அனுப்பக் கூடாது என்று தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் வலுத்துள்ளன.
உச்சகட்டமாக நேற்று சட்டசபை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசைக் கண்டித்து தீர்மானமும் போட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மத்திய அரசு அசைந்து கொடுத்ததாக தெரியவில்லை. அதைத்தான் குர்ஷித்தின் பயணம் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக இதுகுறித்து குர்ஷித் கூறுகையில், காமன்வெல்த் மாநாட்டுக்குப் பிரதமர் வராததில் பெரிய பிரச்சினை இல்லை. இது புறக்கணிப்பும் அல்ல. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வருகிறது. இதுபோல பல காரணங்களை மனதில் வைத்துத்தான் அவர் போகவில்லை. எனவே இதை புறக்கணிப்பு என்று கூற முடியாது. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்களின் மன உணர்வுகளையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. அதையும் பரிசீலித்தோம். தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இலங்கையில் பல வளர்ச்சித் திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சட்டப்பூர்வமான முறையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தேர்தல்நடந்து முடிந்துள்ளது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் என்னை தனது மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நான் மாநாட்டுக்குப் போகிறேன். மாநாடு முழுவதிலும் பங்கேற்பேன் என்றார் குர்ஷித். சொன்னபடி இன்று காலை கொழும்புக்கு புறப்பட்டுப் போய் விட்டார்.
நன்றி : ஒன் இந்தியா


No comments:
Post a Comment