சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்றின் உடலில் திடீர் திடீர் என்று தீப்பிடித்தது. இந்நிலையில் இதற்கான காரணத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் வி.ஜெயராமன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தரங்கிணியைச் சேர்ந்த கர்ணன், ராஜேஸ்வரி தம்பதியின் இரண்டரை மாத குழந்தை ராகுல். ராகுலின் உடலில் திடீர் திடீர் என்று தீப்பிடித்ததால் பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் பீதி அடைந்தனர். ராகுல் பிறந்த இரண்டரை மாதங்களில் அவனது உடலில் 4 முறை தீப்பிடித்துள்ளது. இதையடுத்து குழந்தையை உள்ளூர் மருத்துவரிடம் காண்பித்துள்ளனர்.
அவருக்கு குழந்தையின் உடலில் தீப்பிடிப்பதற்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து குழந்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் உடலில் இருந்து அமிலம் வெளிப்படுவதால் தான் தீப்பிடிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். குழந்தை வளர வளர அதன் உடலில் இருந்து வெளியாகும் அமிலத்தின் அளவு குறையும் என்றும், அதுவரை அதை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை பற்றி கீழ்ப்பாக்கம் பச்சிளம் குழந்தைகளின் துறைத் தலைவர் டாக்டர் நாராயண பாபு கூறுகையில்,
விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தையின் உடலில் தீப்பிடிப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாததால் ராகுல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி சேர்க்கப்பட்டான். ராகுலுக்கு ரத்தம், வியர்வை, சிறுநீர் உள்பட 20க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டன. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 20 மாதிரிகளில் 5ன் முடிவுகள் மட்டுமே கிடைத்துள்ளன.
மீதமுள்ள சோதனைகளின் ஆய்வறிக்கை வரும் 14ம் தேதி தான் கிடைக்கும். அந்த அறிக்கைகளை பார்த்த பிறகே குழந்தையின் உடலில் தீப்பிடிப்பதற்கான காரணத்தை உறுதியாக தெரிந்து சிகிச்சை அளிக்க முடியும். அதுவரை குழந்தை குளிர்ச்சியான இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார். இந்நிலையில் இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் வி.ஜெயராமன் கூறுகையில், தற்போது இரண்டரை மாத குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரிவது போன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 11 வயது சிறுவனின் உடலில் தீப்பிடித்து எரிந்தது. நம் உடலில் இருந்து அமிலம் வெளியேறினால் அடிக்கடி தீப்பிடிக்கும். குழந்தையின் உடல் சூடாகாமல் அதை குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். விரைவில் தீப்பிடிக்கக்கூடிய ஆடைகளை அணிவிக்கக் கூடாது. இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை. குழந்தை வளர வளர அமிலம் வெளிப்படும் தன்மை குறைந்துவிடும். 8 வயது வரை குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment