டெல்லி: தனது மகனுக்கு பைக் ஓட்டவே தெரியாது என்றும், அவனை சுட்டுக் கொன்ற போலீசாரை தூக்கிலிட வேண்டும் என்றும் நாடாளுமன்றம் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட வாலிபரின் தாய் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தெருவுக்கு அருகே 150 பைக்குகளில் வந்த இளைஞர்கள் தங்கள் வாகனங்களில் சாகசம் செய்தனர். இதைப் பார்த்த போலீசார் பைக் சாகசத்தை நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து அந்த வாலிபர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசினர். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் வானை நோக்கி ஒரு முறை சுட்டனர். பின்னர் ஒரு பைக்கின் டயரை நோக்கி சுட்டதில் அந்த வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த கரண் பாண்டே(19) மீது குண்டு பாய்ந்து அவர் பலியானார்.மேலும் அந்த பைக்கை ஓட்டிய புனீத் சர்மா என்பவர் காயம் அடைந்தார்.
இந்நிலையில் இது குறித்து கரணின் தாயார் மஞ்சு கூறுகையில்,
போலீசார் ஒன்றும் தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. என் மகன் திருடன் கிடையாது. ஒரு குழந்தையை கொல்லும் உரிமை போலீசாருக்கு கிடையாது. அவனை கொன்ற போலீசாரை தூக்கில் போட வேண்டும். என் மகனுக்கு பைக் ஓட்டவே தெரியாது. எங்கள் வீட்டில் பைக் இல்லை. அவனுக்கு போதைப் பொருள் பழக்கம் இல்லை. என் மகன் தவறாக நடந்திருந்தால் அவனை போலீசார் லத்தியால் அடித்திருக்கலாம் அல்லது கைது செய்திருக்கலாம். அவனை துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டாம். அவன் எனக்கு ஒரே பிள்ளை. புனீத் சர்மாவுக்கு காயமும் ஏற்படவில்லை, அவனை மருத்துவமனையிலும் சேர்க்கவில்லை. நேற்று காலை 6.30 மணிக்கு அவன் போலீசார் மற்றும் அவனுடைய தந்தையுடன் எங்கள் வீட்டுக்கு வந்தான். என் மகன் விபத்தில் சிக்கியதாகவும் அவனை பார்க்க தங்களுடன் ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனைக்கு வருமாறும் போலீசார் கூறினர். மருத்துவமனைக்கு சென்ற பிறகு போலீசார் கரணின் நண்பர்கள் பெயரை கேட்டனர் பின்னர் என் மகன் விபத்தில் பலியானதாக என்னிடம் தெரிவித்தனர். இதையடுத்து என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மணிக் கணக்கில் காத்திருக்க வைத்தனர். நான் என் குடும்பத்தாருக்கு போன் செய்தபோது என் மகன் போலீசார் சுட்டதில் பலியானதை அவர்கள் கண்டுபிடித்தனர். போலீசார் புனீத்தை கைது செய்ய வேண்டும். மேலும் 5 டாக்டர்கள் அடங்கிய குழு கரணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment