Latest News

ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்!

இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை.

முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது.

அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.

இறைவனது இந்த சட்டதிட்டங்களை அனைத்துத் தரப்பு மனிதர்களும் ஏற்று நடப்பார்களேயானால், இவ்வுலக வாழ்க்கையே சுவர்க்கலோக வாழ்க்கையாக ஆகிவிடும்.

இறைவனது இறுதித் தூதரையும், இறுதி வேதத்தையும் ஏற்று நடக்கும் முஸ்லிம்கள், தாங்கள் பெரும் சிரமப்பட்டு, கடல் கடந்து சென்று, மனைவி மக்களைப் பிரிந்து, நெற்றி வியர்வை சிந்தி ஈட்டும் அதிகப்படியான செல்வத்தில் ஏழைகளதும் பங்கு இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது அவர்களுக்குரிய பங்கை முறையாகக் கணக்கிட்டு அந்த ஏழை மக்களைக் கண்டறிந்து அவர்களிடம் சேர்த்து விடுவதே ஓர் உண்மை முஸ்லிமின் நீங்காக் கடமையாக இருக்கிறது.

நான் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு நெற்றி வியர்வை சிந்தி சம்பாதித்த செல்வத்தில் ஏழைகளின் பங்கா? அவர்களுக்கு அதிலிருந்து கொடுப்பதா? என்ற இறுமாப்பு எண்ணம் ஓர் உண்மை முஸ்லிமுக்கு ஒருபோதும் கூடாது. அல்லது கஞ்சத்தனத்தால் தேடிய செல்வத்தை இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துக் கொண்டு காவல் காப்பதும் ஓர் உண்மை முஸ்லிமுக்கு அழகல்ல.

அகில உலக மக்களுக்கும், அவர்களின் இறைவன் அவனது இறுதி நெறிநூலில் ஏழைகளின் பங்ாகன ஜகாத் பற்றி அல்குர்ஆன் 2:43,83,110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5,11,18,71, 18:81, 19:13,31,55, 21:73, 22:41,78, 23:4, 24:37,56, 27:3, 30:39, 31:4, 33:33, 41:7, 58:13, 73:20, 98:5 ஆக 32 இடங்களில் மடக்கி மடக்கிக் கூறியுள்ளாான். இந்த அத்தனை வசனங்களையும் குர்ஆனை திறந்து பாருங்கள். கண்டிப்பான கடமையான தொழுகையுடன் இணைத்தே ஜகாத் பற்றியும் கூறியுள்ளான்  இறைவன். முஸ்லிம் சமுதாயத்திழன் பெருத்த கைசேதம் முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையோர் கட்டாயக் கடமையான தொழுகையிலும் பொடுபோக்காக இருக்கின்றனர். ஏழைகளின் பங்கான ஜகாத்தை முறைப்படி கொடுப்பதிலும் கஞ்சத்தனம் காட்டுகின்றனர்.

முஸ்லிம் செல்வந்தர்கள் அனைவரும் தங்களின் செல்வத்திலுள்ள ஏழைகளின் பங்கான ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டுக் கொடுத்து விட்டால், முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு ஏழையைக் கூட பார்க்க முடியாது. ஏழைகளின் பங்கு எனும்போது இறைவன் ஏழைகளுக்குக் கொடுக்கச் சொல்லி நம்மிடம் அந்தப் பங்கை கொடுத்துள்ளான். அது இறைவனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட அமானிதம் என்பதை முஸ்லிம் செல்வந்தர்கள் உணர வேண்டும். உதாரணமாக நாம் மிகவும் மரியாதை காட்டும் ஒரு பெரும் செல்வந்தர் நம்மிடம் ஒரு பத்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்து நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு நபரைச் சொல்லி அவரிடம் கொண்டு கொடுத்து விடும்படிச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது நமது கடமை என்ன? நாணயமாக அந்த பத்தாயிரத்தை உரிய நபரிடம் சேர்த்து விடுவதுதானே நமது நீங்காக் கடமை அவ்வாறு செய்யாமல் இப்போது ரூபாய் பத்து ஆயிரம் நமது கையில்தான் இருக்கிறது. எனவே அது நமக்கே சொந்தம் என்று தவறாக எண்ணி அந்தப் பணத்தை உரியவரிடம் கொடுக்காமல் வைத்துக் கொண்டால் அது அமானத மோசடியா இல்லையா? நீங்களே சொல்லுங்கள். நாம் மிகவும் மரியாதை வைத்திருக்கும் அந்த செல்வந்தருக்கு, அவர் கூறியபடி அவர் கூறிய நபருக்கு அந்த பத்து ஆயிரத்தை நாம் கொடுக்கவில்லை என்பது தெரிய வரும்போது நமது நிலை என்னவாக இருக்கும்? நம்மை அவர் மனிதராக மதிப்பாரா? ஒருபோதும் மதிக்கமாட்டார்.

இதுபோல்தான் இறைவன் நமக்குத் தந்த செல்வத்திலிருந்து ஏழைகளது பங்கை அவர்களுக்கு உரிமையானதை அவர்களிடம் ஒப்படைக்காமல் நாமே சேமித்து வைத்துக் கொண்டால் அது அமானித மோசடியாகும். இது பற்றி அல்லாஹ் அவனது இறுதி நெறிநூலில் கூறுவதைப் பாரீர்!

"எவர்கள் பொன்னையும். வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கிறார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுதூன் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் : 9 : 34.35)

இவ்வளவு கடுமையான எச்சரிகையைப் பார்த்த பின்னரும் ஒரு முஸ்லிம் கஞ்சனாக இருப்பானேயானால் அவன் மறுமையை உறுதியாக நம்பும் ஓர் உண்மை முஸ்லிமாக ஒருபோதும் இருக்கமாட்டான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்தவுடன் முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் ஜகாத் கொடுக்க மறுத்தனர். அப்போது முதல் கலீஃபாவாகப் பொறுப்பு ஏற்றிருந்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவர்கள் தொழுகைக்கும் ஜகாத்திற்கும் வேறுபாடு காட்டுகிறார்களோ அவர்களோடு போர் புரிந்ரேத தீருவேன். (சென்ற வருடம்) நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்ததிலிருந்து ஒட்டகத்தைக் கட்டும்ட ஒரு சிறிய கயிறைக் கூட (இந்த வருடம்) தர மறுத்தால், அவர்களுடன் போர் புரிவேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்.

இந்த ஹதீஸிலிருந்து ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் சில தவ்ஹீத் மவ்லவிகள் "ஜகாத்' என்றால் கரித்துச் சுத்தப்படுத்துதல், ஒருமுறை சுத்தப்படுத்தினால் சுத்தமாகிவிடும். மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்த வேண்டியதில்லை. எனவே வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று செல்வந்தர்களைத் திருப்திப்படுத்த புதிய சட்டம் சொல்கிறார்கள். இதற்காக அவர்களின் யூகத்தைச் சொல்கிறார்களே அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் தரவில்லை.

"ஒரு முறை குளித்தால் சுத்தமாகி விடுகிறோம். மீண்டும் மீண்டும் குளிக்க வேண்டியதில்லை" என்று ஒருவன் சொன்னால் அது எந்த அளவு அபத்தமான கருத்தோ அது போன்றதொரு அபத்தமான கருத்தோ அது போன்றதொரு அபத்தமான கருத்தே இது. அது சரி! ஒரு முறை ஜகாத் கொடுத்தால் அந்தப் பொருள் சுத்தமாகிவிடுகிறது; மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை என்றால் பாட்டனுக்குப் பின் மகன். மகனுக்குப் பின் பேரன் என்று தலைமுறை, தலைமுறையாக வாரிசு அடிப்படையில் சொத்து வந்து சேர்ந்தாலும் ஜகாத் கடமை இல்லைதானே. காரணம் பாட்டன் ஜகாத் கொடுத்து சுத்தப்படுத்தி விட்டார். மகனுக்கு, பேரனுக்கு அந்தக் கடமை இல்லைதானே. இதற்கும் புதுச் சட்டம் சொல்வார்களா? அப்போது சுத்தமாகி விட்டது என்ற சுய விளக்கம் காற்றில் பறந்து விடுமே? என்ன புது சுய விளக்கம் தரப்போகிறார்கள்?

ஜகாத் ஒரு முறை கொடுத்தால் போதும் என்றிருந்தால் செல்வம் கையில் கிடைத்தவுடன் ஜகாத் கடமையாகிவிடுமே. விவசாயம் அறுவடையானவுடன் ஜகாத் கடமையாவது போல், மேலும் விவசாயத்தில் பத்தில் ஒரு பங்கு என்றிருப்பது போல் இங்கும் பத்தில் ஒரு பங்கு அல்லவா ஜகாத் கொடுக்கவேண்டும். ஆனால் மிகவும் குறைவான நாற்பதில் ஒன்று என்றும் அதுவும் ஒரு வருடம் பூர்த்தியான பின்னர் கொடுக்க வேண்டும் என்று ஏன் இருக்கிறது? சிந்திக்க வேண்டாமா?

மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருளை விட தனி மனிதன் சொத்துச் சேர்க்க இஸ்லாம் அதிக சலுகை கொடுத்திருக்க முடியுமா? பொது மக்களின் உணவுத் தேவையை விட தனிமனிதன் சொத்து சேர்ப்பதற்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்திருக்க முடியுமா? இந்த நேர்மையான சிந்தனைகளை நாம் புரோகித மவ்லவிகளிடமிருந்து எதிர் பார்க்க முடியாது.

செல்வந்தர்களே! நடுநிலையோடு விளங்கிக் கொள்ளுங்கள். சொத்துக்களுக்காக நீங்கள் ஜகாத் கொடுக்கவில்லை. அந்த சொத்துக்கள் உங்கள் கையை விட்டுப் போகாமல் உங்களிடமே ஒரு வருடம் இருந்ததற்காகத்தான் ஏழை வரி கொடுக்கிறீர்கள். 'செல்வம்' என்பது நிலையாக எங்குமே தங்கி இருப்பதில்லை. கைமாறி, கைமாறி சென்று கொண்டே இருப்பதால்தான் அதனை செல்வம் என்கிறோம். அப்படிப்பட்ட செல்வம் அப்படி கைமாறிச் செல்லாமல் ஒரு வருடம் முழுமையாக உங்களிடம் இருந்ததால்தான் அதில் நாற்பதில் ஒன்று ஏழை வரியாகக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

இப்படி அந்தச் செல்வம் கைமாறிச் செல்லாமல் ஒருவரிடம் இருக்கும் காலம் எல்லாம் அவர் வருடா வருடம் அதற்கு நாற்பதில் ஒன்று ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார். இது நமது யூகம் அல்ல. வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றே நேரடியாகச் சொல்லும் ஹதீஸும் இருக்கிறது. அதையும் பாரீர்:

மூன்று காரியங்களைச் செய்பவர்கள் இறை விசுவாசத்தின் ருசியைச் சுவைத்துக் கொள்வார்கள்.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற அடிப்படையில் அவனை மட்டுமே வணங்குபவர்.

2. தமது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர்.

3. பல் உடைந்த, மட்டமான, நோய்வாய்ப்பட்டவைகளை கொடுக்காமல் இருப்பவர். அல்லாஹ் உங்கள் பொருளிலிருந்து மிக உயர்ந்தவைகளைக் கொடுக்கச் சொல்லவும் இல்லை. மிகக் கீழானவைகளையும் கொடுக்கச் சொல்லவில்லை. (நடுத்தரமானதையே கொடுக்கச் சொல்கிறான்) (நூல்: அபூதாவூத் 1349)

மேலும் 1342 ஹதீஸையும் பார்வையிடவும்.

ஜகாத் வருடா வருடம் கொடுக்கக் கட்டளையிட்டு நேரடியான ஹதீஸ் இருக்கும்போது, மனிதர்களின் சொந்தக் கற்பனைகளை ஏற்றுச் செயல்படுகிறவர்கள் மோசம் போகிறவர்களே. அது மட்டுமல்ல வருடா வருடம்ட ஜகாத் கொடுப்பதற்கு புகாரி, முஸ்லிமில் காணப்படும் முதலாவது கலீஃபா அபூபக்கர்(ரழி) அவர்களது ஹதீஸும், அபூதாவூதில் காணப்படும் இந்த ஹதீஸும் வலுவான ஆதாரங்களாகும்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கருத்தில் (மத்தன்) அமைந்த அறிவிப்பாளர் வரிசையில் கோளாறுள்ள இதர ஹதீஸ்களும் 'ஹஸன்' தரத்தில் அமைகின்றன. எனவே இந்த தவ்ஹீத் மவ்லவிகளின் சுயவிளக்கத்தைக் கேட்டு தங்களது சொத்துக்களுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்காதிருப்பவர்கள் 9:34,35 குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெறுவார்களாக. அல்லாஹ்வை பயந்து கொள்வார்களாக.

வருமானத்தை நோக்கமாகக் கொண்டு முதலீடு செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள். நிலங்கள். வாகனங்கள் மற்றும் இதர பொருள்கள் அனைத்துமே முதலீடாகக் கருதப்பட்டு அவற்றிற்கும் அவற்றிலிருந்து பெறப்படும் வருமானத்திற்கும் கணக்கிட்டு வருடா வருடம் ஜகாத்-ஏழைகளுக்குரிய பங்கை அவர்களது உரிமையை அப்படிப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்து விடுவது செல்வந்தர்களின் கடமையாகும்.

அப்படி அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஏழைகளுக்குரியதை முறைப்படி அவர்களிடம் கொடுத்து விடும் செல்வந்தர்களின் சொத்து சுகங்களில் மேலும் மேலும் அபிவிருத்தி (பரக்கத்) ஏற்படுவதுடன். அவற்றின் பாதுகாப்பிற்கும் அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

அது மட்டுமல்ல; நாளை மறுமையில் அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தமும், மகத்தான பதவிகளும், உன்னத சுவர்க்கலோக வாழ்க்கையும் நிரந்தரமாகக் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே செல்வந்தர்கள் தங்களின் சொத்து சுகங்களைக் கணக்கிட்டு வருடா வருடம் அவற்றிற்கு முறையாக ஜகாத் கொடுக்க முன்வருவார்களாக.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.