Latest News

நோன்பு மிகச் சிறந்த இயற்கை மருத்துவம்!

தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்

உள்ளத்திற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். அல்ஹம்துலில்லாஹ். எனவே இப்புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்று அம்மாதத்தினை சிறப்பிக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். உடலுக்கும் உள்ளத்திற்கும் வசந்தகாலம் நோன்பு மாதமாகும்.

இஸ்லாமிய மார்க்கம் நமது நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹிவசல்லம் அவர்களின் பிறப்பின் பின்னர் தோன்றியதொரு நவீன மதமல்ல. அது உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து அதனைப் படைத்தவனால் பிரகடனப்படுத்தப்பட்டதொரு மார்க்கம் என்பதற்கு நோன்பையும் ஓர் உதாரணமாகக் கூறலாம்.

காரணம் அனைத்து மத கோட்பாடுகளிலும் நோன்பு பற்றிய அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது. இதனையே அல்லாஹ் தனது திருமறையில், விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம்) நீங்கள் உள்ளச்சமுடையோர் ஆகலாம் என அல்லாஹ் கூறுகின்றான். (2:183)

எனவே நோன்பு சமீபகாலமாக தோன்றியது அல்ல. அது அல்லாஹ்வால் பிரபஞ்சம் படைக்கப்பட்ட நாளிலிருந்து தொன்றுதொட்டு வரக்கூடிய மனிதர்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றதொரு கிரியையாக இருந்துள்ளது. உலகிலுள்ள சகல மதத்தினர்களும் ஏதாவதொரு அமைப்பில் காலாகாலமாக நோன்பு நோற்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

நோன்பு நோற்கும் ஒருவர், சுபஹ் தொழுகைக்கான அதானொலி கேட்கும் வரை உண்டு, பருகலாம். அதானொலி கேட்டுவிட்டால் உண்பதைக் கட்டாயம் நிறுத்திக் கொள்ள வேண்டும். பேணுதலுக்காக ஸஹர் முடிவு நேரத்துடன் உண்டு, பருகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஸஹர் செய்து கொள்ளுங்கள். அதில் பரகத் இருக்கிறதெனக் கூறிடும் அண்ணல் நபி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள், ஸஹரை முடியுமானவரை பிற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை பகர்ந்துள்ளார்கள். யூதர்கள் தங்களது ஸஹர் உணவை நேரகாலத்தோடு முடித்துக்கொள்ளும் பழக்கமுடையவர்களாக இருந்துள்ளதே இதற்கான காரணமாகும்.

அவ்வாறே நோன்பு திறப்பதற்கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பைத் திறந்து விட வேண்டும். யூதர்கள்தான் நோன்பு திறப்பதை தாமதிப்பார்கள் என்று நபி மொழி கூறிக் கொண்டிருக்கிறது. சூரியன் முழுமையாக மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவதுதான் நோன்பு திறக்கும் நேரமாகும்.

  ஸஹர் உணவு...:

ஸஹர் நேரத்தில் உணவு உட்கொள்வது ஸுன்னத்தான அமலாகும். காலை மதியம், இரவு என வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப்போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை ஒரு மாத காலம் நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயற்கை முறையில் ஓய்வு கிடைத்து புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கிறது. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன. குறிப்பாக நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 வரை உள்ள 2 மணி நேரங்களாகும். ஸஹர் நேரத்தில் நோன்பு நோற்பதற்காக விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இது ஸஹர் நேரத்தில் உணவு உட்கொள்வதனால் நோன்பாளியின் தேகம் பெற்றுக்கொள்கின்ற பலனாகும். மேலும் இரவின் விரும்பிய நேரத்தில் அடுத்த நாள் நோன்பு நோற்பதற்கான நிய்யத்தினை அவசியம் வைத்துக்கொள்ள வேண்டும். ஸஹர் உணவு உண்ட பின்னர்தான் நிய்யத் வைக்க வேண்டும் என்பதல்ல.

  இஃப்தார் :

நோன்பு திறப்பதற்கான நேரம் வந்ததும் நோற்றிருந்த நோன்பு செயலற்றுப்போய்விடும். ஆகாரம் இதற்குப் பிரதானம் அல்ல. எனினும் உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் பொழுது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்கட்டும். அதில் பரகத் இருக்கிறது. அது கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது தூய்மையானதாகும் என்ற அண்ணலார் ஸல்லல்லாஹ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பொன் மொழி திர்மிதி, இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.
நோன்பாளி தனது நோன்பைத் திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை நிராகரிக்கப்படுவதில்லை என அண்ணலெம் பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (திர்மிதி) எனவே இந்நேரத்தை நாம் வீணடித்துவிடக்கூடாது.

  பேரீத்தம் பழத்தின் மகிமை..

நோன்பாளியின் உடலில் பகல் பொழுதுகளில் ஏற்படுகின்ற சோர்வு, களைப்பு சாப்பாடு குறைந்ததனால் ஏற்பட்டதல்ல. சராசரியாக ஒருவரது உடலில் இருக்க வேண்டிய சர்க்கரை குறைவதுதான். அதற்கான காரணமாகும். உடலில் குறைந்துவிட்ட சர்க்கரையை மீண்டும் உடலுக்கு மிக வேகமாக வழங்கி உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்தும் அபார சக்தி பேரீத்தம் பழத்துக்கு இருப்பதாக நவீன ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றார்கள். எனவே, நோன்பினை பேரீத்தம் பழத்தினையும் தண்ணீரையும் கொண்டு திறவுங்கள். பின்னர் மஃரிப் தொழுகையை நிறைவேற்றிவிட்டு போதுமானளவு உண்டு, பருகிக் கொள்ளுங்கள்.

அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்து ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட கண்ட உணவுகளை உண்பது நோன்பின் நோக்கத்தைப் பாழாக்கிவிடும். நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிற்றிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும் இவைகளை நீக்கிச் சுத்தப்படுத்தும் சக்தி பேரீத்தம் பழத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், செயற்கைப் பானங்கள், எண்ணெய்யில் மூழ்கி எடுக்கப்பட்ட உணவுப் பண்டங்களின் மூலமாக நோன்பு திறப்பதைத் தவிர்க்க வேண்டும். இது உடல் நலத்தை பாதித்துவிடும். இவ்வாறு முறையாக நோன்பு திறந்த பின்னர் ஒரு மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது. பேரீத்தம் பழத்தின் வித்தை பொடி செய்து கோபி, பால், சர்கரை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு உரமளிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றது.

பேரீத்தம் பழத்தினை உட்கொண்டு நோன்பு திறக்குமாறு அண்ணலெம் பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறிய அற்புத வாக்கின் யதார்த்தம் என்ன என்பதை அறிஞர் பெருமக்களான ஹஜர் அல் அஸ்கலானீ, இப்னுல் கையிம், புஜைரிமி, தஹாவீ, இப்னுல் அரபி போன்ற பெருமக்கள், சுமார் 700 வருடங்களுக்கு முன்னரே தெளிவுபடுத்திவிட்டார்கள். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வார்த்தைகள் வெறும் சாதாரண வார்த்தைகள் அல்ல. அது தெய்வீக வார்த்தைகள்தான் என்பதை நவீன ஆய்வாளர்கள் இப்பொழுதுதான் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அமெரிக்க நோய்த் தடுப்பு இயக்குநரான மருத்துவர் எல்ஸன் எம். ஹாஸ் என்பவர் நோன்பு பற்றி பின்வருமாறு விளக்குகிறார். நோன்பு மிகச் சிறந்த இயற்கை மருத்துவம். அது மிகத் தொண்மையான உலகளாவிய நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோயுற்ற பொழுது உணவைத் தவிர்த்திருந்ததே என் உடல் நலம் தேற உதவியது எனக் கண்டுபிடித்தேன்.

புதிய சக்தி உடலில் பாய்வதை உணர்ந்தேன். உடலியக்கத்தில் உட்சாகம் பளிச்சிடுவதை உணர்ந்து கொண்டேன். எனவே நோன்பு நலம் தரும் பல நோய்களைத் தடுக்கிறது என்று குறிப்பிட்டதுடன், அமெரிக்கர்களின் பெரும்பாலான நோய்களுக்கு காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததேயாகும். நோன்பு என்றால் என்னவென்பது அவர்களுக்குத் தெரியாதிருக்கிறது. உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் முதலிய வியாதிகள் தோன்றுவதற்கு உணவுக் கட்டுப்பாடின்மையே காரணமாகும். நோன்பு இவற்றைத் தடுக்கும் கருவியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள். இப்பொழுது பட்டினி கிடப்பது நோயுற்றவர் அல்ல. அவருடைய நோயே என மற்றுமொரு அமெரிக்க வைத்தியர் டியூவே என்பவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு மனித உடலுக்கு அழகான ஆரோக்கியத்தினை அள்ளி வழங்கும் சிறப்பான நோன்பினை நோற்று, உள ஆரோக்கியத்தினைப் பெற்றிடவும் முயற்சிக்க வல்ல அல்லாஹ் அனைவருக்கும் தெளபீக் செய்வானாக!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.