இஸ்லாம் மக்கள் மீது உள்ள ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை இந்த ரமலான் மாதத்தில் நினைவு கூரும்போது அத்துடன் நினைவுக்கு வரும் மற்றொரு கடமை ஸகாத்துல் பித்ராவாகும். புனித நோன்பை ஒட்டி விதியாக்கப்பட்ட கடமையாக ஸகாத்துல் பித்ரா விளங்குகிறது.
அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றுவது எப்படி கடமையோ அதுபோன்றே ஒரு மனிதன், மற்ற மனிதனுக்கு செய்ய வேண்டியதும் முக்கியமான கடமையாக்கப்பட்டுள்ளது. இரண்டையும் ஒருங்கே நிறைவேற்றுவதுதான் இபாதத் வணக்கம் என்று இஸ்லாம் கருதுகிறது.
அல்லாஹ்வுடைய ஏவலுக்குக் கட்டுப்பட்டு ஒருமாதம் நோன்பு நோற்று விட்டு அடுத்த நாள் பெருநாள் தினத்தை சந்தோஷமாகக் கொண்டாட தயாராகும் போது நாம் மட்டும் சந்தோஷமாக பெருநாள் கொண்டாடக் கூடாது. நம்முடன் நோன்பிருந்தவர்வகளும் சந்தோஷமாக பெருநாள் கொண்டாட வகை வேண்டும் என்பதற்காகத்தான் ஸகாதுல்பித்ராவை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
ஸகாத்துல் பித்ரா எல்லோர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. ஒரு அடிமைக்கும் இது பொருந்தும். அதே சமயம், எல்லோராலும் இதனைச் செய்ய இயலும்.
அதாவது, இந்த பித்ராவை பணக்காரர்கள் மட்டுமல்லாமல் தனது குடும்பத்தினர் பெருநாளைக் கொண்டாட செலவு போக, யாரிடம் சிறிது பணமோ, பொருள் வசதியோ இருக்கிறதோ அவர்கள் அனைவரும் இந்த பித்ராவை கொடுக்க வேண்டும். இது கடமையாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அனைவர் மீதும் பித்ரா கடமையாக்கப்பட்டுள்ளது. பணம், பொருள் இல்லாதவர்கள் கூட, பேரீச்சம்பழம், தீட்டிய கோதுமை ஆகியவற்றில் (ஒரு ஸலாவு) கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும், வயதான முதியவர்களுக்கும், நோன்பு நோற்க முடியாமல் இருப்பவர்களுக்குமாக சேர்த்து அந்த குடும்பத்தின் தலைவர் பித்ரா கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இதைத்தான் ஒருவன் பித்ராவாகக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. தன்னால் இயன்றதையும், பெறுவதற்கு ஏற்றதான ஒரு பொருளை பித்ராவாக அளிக்கலாம். மக்கள் எதனை உண்ண இயலுமோ அதனையே பித்ராவாக அளிக்க வேண்டும்.
நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவையோ, பேரீச்சம் பழத்தையோ தீட்டப்படாத கோதுமையோ பாலாடைக் கட்டியையோ அல்லது உலர்ந்த திராட்சையோ ஒரு ஸலாவு (பித்ரா) கொடுப்போம் என அபூ ஸயீதுல் குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)
இந்தியாவில் அரிசி, கோதுமை போன்றவை உணவாக உட்கொள்ளப்படுகிறது. எனவே அதனையும் பித்ராவாகக் அளிக்கலாம்.
No comments:
Post a Comment