Latest News

2002 கலவரமும் கார் டயரில் சிக்கிய நாய்க்குட்டியும்!- நரேந்திர மோடியின் ஒப்பீடு

அகமதாபாத்: நான் ஒரு இந்து தேசியவாதிதான். அதில் எந்தத் தவறும் இல்லையே என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் 2002 கலவரங்கள் பற்றி கருத்து கூறுகையில், "ஒரு நாய்க்குட்டி கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு மனவேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அதுபோன்றதுதான்," என்று கருத்து தெரிவித்துள்ளார் மோடி

காந்திநகரில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, குஜராத் கலவரம் தொடர்பாக பலரும் தங்கள் மீது குற்றம் சாட்டியபோது உங்கள் மனநிலை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், "நான் ஏதாவது தவறு செய்திருந்தால்தான், நான் குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். 'நாம் பிடிபட்டு விட்டோம். நாம் திருடிவிட்டதால் சிக்கிக்கொண்டு விட்டோம்' என்பது போல் நினைக்கும்போதுதான் எரிச்சலும், விரக்தியும் ஏற்படும். ஆனால், எனது விஷயம் அப்படிப்பட்டது அல்ல. நடந்த சம்பவங்களுக்காக (குஜராத் கலவரம்) வருத்தப்படுகிறீர்களா? என்று கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு எனக்கு விரிவான நற்சான்றிதழை அளித்துள்ளது.

எனினும், ஒரு காரை நாமே ஓட்டிச் சென்றாலும் சரி, மற்றொருவர் ஓட்டும்போது பின் இருக்கையில் நாம் அமர்ந்திருந்தாலும் சரி, ஒரு நாய்க்குட்டி கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு மனவேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அதுபோன்றதுதான். நான் முதல்வராக இருக்கிறேனோ, இல்லையோ, அடிப்படையில் நான் ஒரு மனிதன். எங்காவது கெட்டது நடந்தால், அது வருத்தம் தருவது இயற்கைதான். கலவரம் நடந்தபோது, அதை ஒடுக்குவதற்காக நான் எடுத்த நடவடிக்கைகள் சரியானவைதான். அதில் நான் செய்த தவறு என்ன? ஆண்டவன் நமக்கு அளித்துள்ள சிந்திக்கும் ஆற்றல், நான் பெற்றுள்ள அதிக அளவிலான அனுபவம், அந்தச் சூழ்நிலையில் எனக்குக் கிடைத்த வசதிகள் ஆகியவற்றைச் சிறப்பான அளவுக்குப் பயன்படுத்தினேன். அதையே சிறப்புப் புலனாய்வுக் குழுவும் ஆராய்ந்தது. நான் அப்போது எந்தத் தவறும் செய்யவில்லை. நாட்டு அரசியலை இரு துருவங்களாக்கும் நபர் என்று என் மீது வைக்கப்படும் விமர்சனத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் இரு துருவங்களாகத்தான் உள்ளன. இத்தகைய தன்மை ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாகும்.

நான் ஒரு தேசியவாதி, தேசபக்தன். நீங்கள் என்னை ஹிந்து தேசியவாதி என்று அழைத்தால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரத்தில் நான், வளர்ச்சிக்காகப் பாடுபடும் நபராகவும் பார்க்கப்படுகிறேன். இந்த இரண்டு பிம்பங்களிலும் எந்த முரண்பாடும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான்," என்றார் மோடி.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.