தேனி: சமூகத்தை கொச்சைப்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயலை இயக்குநர் பாரதிராஜா செய்துள்ளார். இதனை கண்டிக்கிறோம். எனவே அன்னக்கொடி படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி தேனியில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு பார்வர்ட் பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டின் முன்பாக பார்வர்ட் பிளாக் கட்சியினர் திடீரென திரண்டனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், அவர்கள் வீட்டை நெருங்கும் முன்பு தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் பார்வர்ட் பிளாக் கட்சியினர் வீட்டுக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் அவர்கள் மனு அளித்தனர். அதில், அன்னக்கொடி சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் உள்ளது.
காதல் மற்றும் கலப்பு திருமண பிரச்சினைகளால் தர்மபுரி நாயக்கன் கொட்டாய், மரக்காணப் பகுதியில் நடந்த கலவரங்கள் தற்போது ஓய்ந்து உள்ளன. இந்த சினிமா மீண்டும் தென் தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்துவதாக உள்ளது. சமூகத்தை கொச்சைப்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயலை பாரதிராஜா செய்து உள்ளார். இதனை கண்டிக்கிறோம். எனவே அன்னக்கொடி படத்தை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment