நோன்புக் காலம் வருவதையடுத்து நோன்புக் கஞ்சிக்கான அரிசியை முன்னதாகவே விநியோகிக்கும்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையில் 28 ஜூன் வெள்ளியன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், பொருளாளர் எம்.எல்.ஏ.ஷாஜகான், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதன்மைத் தீர்மானங்கள்:
உத்தரகண்ட் இயற்கைப் பேரிடர் வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. பிரதமர் நிவாரண நிதிக்கு முஸ்லிம்லீக் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
தினத்தந்தி அதிபர் டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனின் மறைவு தமிழ்ப் பத்திரிக்கை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் தினத்தந்தி குழும ஊழியர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
வரும் ஜூலை மாதம் 10ம் தேதி புனித ரமலான் நோன்பு தொடங்கவிருப்பதை முன்னிட்டு நோன்பு தொடங்கும் முன்பே நோன்புக் கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment