சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக கேன்டீன், கழிப்பறை வசதி கொண்ட நவீன கிளாசிக் பஸ், சென்னை - ஸ்ரீரங்கம் இடையே இயக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 189 பஸ்கள், புதுப்பிக்கப்பட்ட 55 பஸ்கள், மகளிர் ஸ்பெஷல் பஸ்களை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ரூ.1.28 கோடி மதிப்பில் பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கு புதிய சி.டி.ஸ்கேன், 54 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு புதிய ஜீப்புகள், திருச்சி கிழக்கு, நாமக்கல் தெற்கு, பூந்தமல்லி உள்ளிட்ட புதிய 5 வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னை - ஸ்ரீரங்கம் இடையே நவீன வசதிகளுடன் கூடிய கிளாசிக் பஸ் விடப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் கேண்டின், கழிப்பறை வசதிகள் உள்ளன. கிளாசிக் பஸ் சர்வீஸை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா, அதில் ஏறி நவீன வசதிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் கேண்டின் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீரங்கத்தில் இருந்து தினமும் காலை 9 மணி மற்றும் இரவு 10 மணிக்கு 2 சர்வீஸ்களாக சென்னைக்கு இயக்கப்படும். மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து காலை 9 மணி, இரவு 10 மணிக்கு ஸ்ரீரங்கத்துக்கு புறப்படும். சொகுசு பஸ்சில் காலை நேரத்தில் பயணிகளுக்கு இட்லி, பொங்கல், ஊத்தப்பம் வழங்கப்படும். 3 இட்லி ரூ.15-க்கும், பொங்கல், ஊத்தப்பம் ரூ.15-க்கும், மதியம் சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் தலா ரூ.20க்கும் வழங்கப்படும். இரவு நேரத்திலும் உணவு வழங்கப்படும்.
மேலும் 5 ரூபாய்க்கு 50 கிராம் மிக்சர், 5 ரூபாய்க்கு பிஸ்கெட் பாக்கெட், 5 ரூபாய்க்கு டீ அல்லது காபி கிடைக்கும். ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு பஸ்சிலேயே விற்கப்படும். பஸ்சின் இருக்கைகள் பயணிகளுக்கு ஏற்றார் போல சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் படிப்படியாக இதுபோன்ற பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
No comments:
Post a Comment