Latest News

அதிரை மெய்சாவின் 'மனசு'

ஓ மனமே நீ தடுமாறினால்
வாழ்வின் அனைத்து நோக்கங்களும்
தடம் மாறித்தான் போகும்

எத்தனை எண்ணக்கனவுகள்
உன் வெண் திரையில் வந்து மோதி
விண்மீன்களாய் ஒளிர்விட்டு மறைகின்றன
அத்தனைக்கும் விடயம் சொல்லும்
அற்ப்புத அலாவுதீன் விளக்கு நீ

எண்ணிலடங்கா பிரச்சனைகள்
நீ எதிர் கொண்ட போதிலும்
தன்னிலடக்கி தக்க
பதிலுரைக்கும்
தார்மீக பொறுப்பாளி நீ

சத்திரத்தில் வந்து
தங்கிவிட்டுப்போகும்
வழிப்போக்கர்களின்
சமுத்திர மடமாய்
பரந்த உன் மன வெளியில்
உயர்ந்த உன் எண்ணத்தில்
உதிக்கும் உந்தன் உந்தல் சக்தி
வியக்கும் வினோதச் செயலாய்
நீ மாற்றி யோசித்ததன் விளைவு
வேற்றுக்கிரகம் சென்று
இவ்வுலகை வியப்புரச் செய்தாய்

இவ்வுலகம் வளர்ச்சி நோக்கி
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
உன் முடிவைக்கேட்டுத்தானே
முன்னேறுகிறது

இதயக்கூண்டின் இருட்டறையில்
ஓர் ஓரத்தில் நீ
உறங்கிக்கிடந்தாலும்
நீ யோசிப்பதாலும்
யாசிப்பதாலும் தானே
இப்பாரினில் பற்பல
புதுமைகளும்
புதுக்கண்டுபிடிப்புக்களும்
பூத்துக்குலுங்குகிறது

வாழ்வியலில் ஏற்ப்படும்
அத்தனை விளைவுகளும்
வகைபடுத்திச்சொல்ல முடியா
அத்தனை வளர்ச்சி முன்னேற்றங்களும்
உன் எண்ண ஓட்டங்களின்
திண்ண ஆலோசிப்பு தானே

மனிதன் பிறந்து
மரணிக்கும் வரை
எத்தனை இன்ப துன்பம்
எத்தனை இன்னல் துயரம்
எத்தனை இனம்புரியா
இகழ் புகழ் நிகழ்வுகள்
அத்தனைக்கும் தீர்வு நிர்ணயித்து
மனிதனுடன் பின்னிப்பிணைந்திருக்கும்
மாபெரும் பொக்கிஷமாய் மணக்கும்
யோசனைகளின் வாசனைக்கூடமே நீ தானே
அதிரை மெய்சா 
குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 13-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.