சென்னை: தமிழக அமைச்சரவை 9வது முறையாக இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சி.த.செல்லப் பாண்டியன், முகமது ஜான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரஹீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரது இலாகாக்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவை மாற்றம் விவரம்: செல்லப்பாண்டியன் வசம் இருந்த தொழிலாளர் நலத்துறை கே.டி. பச்சைமாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முகமது ஜான் வசம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை புதிய அமைச்சரான அப்துல் ரஹீம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புதிய அமைச்சரான எஸ்.பி. சண்முகநாதன் வசம் சுற்றுலாத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு வனத்துறை அமைச்சகம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செந்தூர் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
9வது முறையாக அமைச்சரவை மாற்றம்
2011ம் ஆண்டு மே மாதம் 16ந் தேதி அதிமுக அரசு பொறுப்பேற்றது. ஜுன் மாதம் 27ந் தேதி தமிழக அமைச்சரவை முதல்முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது நீக்கப்பட்ட 2 அமைச்சர்களுடன் மொத்தம் 17 பேர் இதுவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே சட்டத் துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து சி.சண்முகவேலு, எஸ்.பி.சண்முகநாதன், புத்தி சந்திரன், எஸ்.பி.வேலுமணி, செந்தமிழன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.பி.உதயகுமார், எம்.பரஞ்ஜோதி, செல்வி ராமஜெயம், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம் என அமைச்சர்களாக இருந்தவர்கள் நீக்கப்பட்டனர். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் கோகுல இந்திரா, சிவபதி, விஜய் ஆகியோர் நீக்கப்பட்டனர். தற்போது செல்லப் பாண்டியன், முகமது ஜான் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
மீண்டும் எஸ்.பி.சண்முகநாதன்
தற்போது புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி. சண்முகநாதன் இதே ஜெயலலிதா அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவையில் இவரது பதவி பறிபோனது. தற்போது சுற்றுலாத் துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சராக இருந்த செல்லப் பாண்டியன் வசம் இருந்த தூத்துக்குடி மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டு இன்று காலைதான் எஸ்.பி. சண்முகநாதனிடம் ஒப்படைக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆவடி அப்துல் ரஹீம்
சென்னையை அடுத்த ஆவடி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றர் அப்துல் ரஹீம். இவர் முதல் முறையாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் நாளை மாலை 4.45 மணிக்கு தமிழக ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர்.
No comments:
Post a Comment