சென்னை: சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் ஒரு லட்சம் இந்தியத் தொழிலாளர்களை மீட்கக் கோரி மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு இந்திய தேசிய லீக் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முறையான வேலை பெர்மிட் உள்ளிட்ட எந்த வகையான ஆவணமும் இல்லாமல் கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் சவூதியில் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் ஜூலை 3ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என சவூதி அரசு எச்சரித்துள்ளது.
இந்த 25 லட்சம் பேரில் ஒரு லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். இவர்கள் இந்தியா திரும்புவதற்காக அவசர விசா கோரி இந்தியத் தூதரகத்தை அணுகினால் அங்கு இழுத்தடிக்கப்படுகிறார்கள்.இதனால் முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளனர் இந்தியத் தொழிலாளர்கள்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சவூதியில் தவித்து வரும் இந்தியர்களை தனி விமானம் அனுப்பி மீட்டு வர வேண்டும் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அதன் மாநில பொதுச் செயலாளர் தடா ரஹீம் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டு சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆனால் அவர்களை தெரு முனையிலேயே தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
No comments:
Post a Comment