டாக்கா:வங்காளதேசத்தில் மத அவமதிப்புச்சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஹிபாஸத்தே இஸ்லாமி இயக்கத்தின் கடந்த மே 6-ஆம் தேதி தலைநகர் டாக்காவில் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு மூடி மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான செய்தி அறிக்கையை அல்ஜஸீரா வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானதாக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் கூறுகிறது.ஆனால், பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என்றும், அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் பொய் என்றும் நிரூபிக்கும் வீடியோ காட்சிகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக அல்ஜஸீரா கூறுகிறது.
எத்தனை எதிர்ப்பாளர்களை போலீஸ் சுட்டுக்கொலைச் செய்தது என்பது தெளிவில்லை. ஆனால், மருத்துவமனையில் சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு மூடி மறைத்ததாக கூறும் செய்தி அறிக்கைக்கு வங்காளதேச வெளியுறவுத்துறை அமைச்சர் திபு மோனி மறுத்துள்ளார். இதுத்தொடர்பாக விசாரணை நடத்தவேண்டியுள்ளது என்றும், பலியானவர்களின் எண்ணிக்கையை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிபரத்தில் வித்தியாசம் உள்ளதாக அரசோ, நாட்டின் பொதுமக்களோ கருதவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தாடி வைத்த 14 பேருடைய உடலை போராட்டத்திற்கு பிறகு தான் அடக்கம் செய்ததாக டாக்காவில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கப்றுஸ்தானில்(அடக்கஸ்தலத்தில்) இறந்த உடல்களை அடக்கம் செய்யும் அப்துல் ஜலீல் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணரவேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment