Latest News

குருவி...!


இது முழுக்க முழுக்க லைட் ரீடிங் ..அதனால் யாரும் ட்யூப்லைட் போட்டு படிக்கனும்னு சொல்லவில்லை.

விசயம் சொல்லிக் கொள்வது மாதிரி பெரிசா ஒன்னுமில்லை என்றால் தன்னடக்கம் கருதி சின்னதாக சொல்வது மாதிரி விமான பயணம் என்பதில் நிறைய டெக்னிக்கல் விசயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்து படிப்பவர்களுக்கு நான் துண்டை போட்டு தாண்டி சொல்கிறேன்இதில்அப்படி ஒன்னும் விசயமில்லை. [தெரிஞ்சாதானே எழுதறதற்கு!!!].

எனவே உருப்படியான விசயம்தான் படிப்பேன் என்று 'மாகானதிபதி" முன் சத்யப்பிரமானம்எடுத்தவர்கள் வீட்டில் வெங்காயம் வெட்டிக் கொடுப்பது துவைத்து வைத்த பிள்ளைகளின்துணியை காயப்போடுவது போன்ற பொறுப்பான வேலைகளில் ஈடுபட்டு அப்படியும் நேரத்த ஒட்டமுடியவில்லை என்றால் இதைப்படிக்களாம்.
 1968 என நினைக்கிறேன். முதன் முதலில் என் வாப்பா திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதை பார்க்க / அழைக்க போயிருந்தேன். அவ்வளவு சின்ன வயதில் அந்த விமான நிலையத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் ஐஸ் வாட்டர் வரும் [குவளை மிஸ்ஸிங்] அதை அழுத்தி குடித்ததில் ஜென்ம புண்ணியம் அடைந்ததாக நினைத்தேன்.

அப்போது வந்த விமானத்திற்கு "காத்தாடிவெளியில் சுற்றியது. இப்போதைய டெக்னாலஜியை பார்க்கும்போது ரைட் பிரதர்ஸிடம் நமது இந்தியன் ஏர்லைன்ஸ் லீசுக்கு எடுத்த மாதிரிதான் தெரிந்தது. எங்கே இவனுக ரைட் பிரதர்ஸிடம் வம்புடியாக வாங்கிட்டு வந்துட்டானுகளா என நினைக்க தோன்றும்.

இந்திய முஸ்லீம்கள்  முன்பு பர்மா / சிலோன் என்று பிழைக்க போன காலத்திற்கு பிறகு பினாங்கு பிழைக்கும் தளமானது . [ஏதோ தமிழ்நாடு செய்தித்துறையின் பிளாக் & ஓயிட் ஃபிலிமில் தியேட்டரில் காண்பிக்கும் செய்தித் தொகுப்பு மாதிரி இல்லே!!].
 பயணத்திற்கு  S.S ரஜூலா , M.V.சிதம்பரம் கப்பல்கள் வாழ்க்கையுடன் ஒன்றிப்போனது. [கப்பலில் நான் பயணம் செய்ததில்லை என்பதால் எனக்கு அதைப் பற்றி எழுத தெரியாது என்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்].

பிறகு துபாய் / சவூதிக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்தவுடன் வந்தது விமான பயணங்களின் பயன்பாடு. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லோரையும் ஏற்றிக் கொண்டு சென்றதில் தான் காமெடி. 

சிலர் கட்டிச் சோறிலிருந்து மாங்கா ஊறுகாய் வரை வாங்கிப்போய் துபாயில் சாப்பிட்டதாக ஆட்களை அழைக்கப் போகும்போது கேள்விப் பட்டதுண்டு.

ஆரம்ப காலத்தில் நீங்கள் விமான டிக்கெட் எடுத்திருந்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து ஒரு மினி வேன் அழைத்துச் செல்லுமாம். இப்போது நிமிடம் அந்த விமான கம்பெனியின் மேனேஜிங் டைரக்டரே தாமதமாக போனாலும் "போடா பசுநெய்"என்று சொல்லிவிட்டு கேப்டன் புறப்பட்டு விடுவார். [ஏதாவது வித்யாசமா எழுதுங்க என்று அ.நி கட்டளை இல்லாவிட்டால் போடா வெண்ணே"  என்று சொல்லிவிட்டு கேப்டன்... என எழுதியிருக்களாம்.]

இதில் ப்ளேனில் கொண்டு போகும் பொருட்களும் அதை கையாளும்  ஆட்களும்தான் இன்னும் காமெடி. ஒருமுறை நான் காட்மாண்டுவில் விமானத்தில் ஏறி உட்கார்ந்ததும் அதில் வந்த சில நேப்பாளிகளையும் அவர்கள் வைத்திருந்த கூடை மாதிரி இருந்த பொருட்களை பார்த்ததும் எனக்கு தூக்கமே வரவில்லை. ஏதும் பாம்பு போட்டோ [படம்]எடுத்து ஆட ஆரம்பித்தால் என்ன செய்வதென்று ஒரே புலப்பம். தவிறவும் நாம் ஏதாவது பெண் பாம்பை வஞ்சித்திருக்கிறோமா என்று எனது நினைவுகளை ரிவர்சில் ஒட்டிப்பார்த்தேன். அப்புறம் பாட்டு பாடி நம்மை பழிவாங்குதெல்லாம் இருக்க கூடாதல்லவா?. இருந்தாலும் தனுஸ் எல்லாம் பாட்டுப் பாடுவதற்கு பாம்பு பாட்டு எவ்வளவோ தேவலாம்.
 விமான பயணங்களில் விதிக்கப்படும் 20 கிலோ / 30 கிலோ லக்கேஜ் விதி தனது ரத்தத்தில் கொஞ்சம் கூட இந்திய ரத்தம் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு இனத்தை சார்ந்தவன் ஏற்படுத்தியது என நினைக்கிறேன். தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வெளிநாட்டுக்கு வரும்போது பேரன் / பேத்தியின்   கல்யாணத்துக்கூட உழைக்கும் சோசியல் கான்ட்ராக்டில் கையெழுத்திட்டு வந்து உழைத்து லக்கேஜ்கள் வாங்கி செல்ல வேண்டியிருக்கிறது என்பது எழுதப்படாத விதி. உழைக்கும் ஆட்கள் கதவுக்கு வைக்கும் சக்கை மாதிரி மொபைல்போன் வாங்குவதும் பள்ளிக்கூடம் தாண்டாத பிள்ளைகளுக்கும் நேராக கையெழுத்துப்போட தெரியாத வீட்டுப்பெண்களுக்கு சம்சங் கேலக்ஸி-வாங்குவதும்... என்ன கொடுமை சார் இது??.

லக்கேஜ் கொண்டு போவதற்கென்று இப்போது எவ்வளவோ வசதியான சக்கரம் வைத்த கேபின் பேக் எல்லாம் இருந்தும் சமீபத்தில் மலேசியா வந்த சபீர் ஒரு சூட்கேசுடன் வந்து இறங்கியவுடன் என் மனதில் தோன்றிய வசனம் பாஸ்.. இந்த அணு ஆராய்ச்சி குறிப்பெ வச்சு எந்த இடத்திலே நாம் அணு குண்டு வெடிக்கப் போறோம்??' என்ற கேள்விதான்.  நல்ல  வேலை  ஏர்போர்ட்டிலிருந்துவரும் வழியில் எந்த புத்தர் கோயிலும் இல்லை..இருந்தால் ஆராய்ச்சிக்குறிப்பின் ஒரு பகுதி அங்கு உள்ள மொசைக் கல்லுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என்று காரை விட்டுஇறங்கிவிட்டால் என்ன செய்வது. ??

சூட்கேஸ் பிதுங்க பிதுங்க லக்கேஜ் கட்டும் என் சொந்தக்காரர்களை பார்த்திருக்கிறேன். அது ஒருதனித்திறமை.. எக்கோலாக் சூட்கேசில் 15 கிலோவுக்கு மேல் சர்வ சாதாரணமாக கட்டுவார்கள். இன்னும் சில பேர் பிளாஸ்டிக் கயிறை இழுத்துக்கட்டும் திறமை அலாதியானது. கட்டும்போது இடையில் உங்கள் விரல் மாட்டிக்கொண்டால் பிறகு ஏழுகடல் தாண்டி ஒரு தீவில் உள்ள கிளியிடம் போய் சொல்லி உயிர்பிச்சை கேட்டாலும் அந்த பிளாஸ்டிக் கயிற்றிலிருந்து உங்கள் விரலை எடுக்க முடியாது. அவ்வளவு ஸ்ட்ராங்காக கட்டுவார்கள் அந்த காலத்து நம் ஆட்கள்.

இந்தியாவில் தங்கம் கொண்டுவரலாம் என்ற சட்டம் வந்தவுடன் வரும் எல்லோரிடமும் "பாய் பிஸ்கட் கொண்டு வந்திருக்கீங்களா?' என்ற கஸ்டம்ஸ் ஆபிசரின் கேள்விக்கு வயதான ஒருவர் சொன்ன பதில் கிரீம் தடவியதாஇல்லை தடவாததா?' என்ற அப்ரானி பதிலிலேயே தெரிய வேண்டும் எப்படியாகப்பட்ட ஆட்கள எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று.

நம் மக்கள் மலேசியா சிங்கப்பூருக்கு ஆரம்பத்தில் புறப்பட்டு செல்லும் காலங்களில் வயதைநிர்ணயிக்க கப்பலுக்குள் நுழையுமுன் கன்னத்தை தடவிப்பார்த்து [சவரம் செய்திருந்தால்பெரியவன்”] அனுப்புவார்களாம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் 'மிகப்பெரியகண்டுபிடிப்பு இது. கால ஓட்டத்தில் என்ன என்ன தடைகள் இருந்தாலும் மனித மூளை தப்பிக்க ஈசியாக ஒரு  தடம் போட்டுவிடும் என்பது சமயங்களில் எந்த அரசுக்கும் தெரிவதில்லை.

இப்போது வந்திருக்கும் பட்ஜட் ஏர்லைன்ஸ் அதிகம் விமான      பயணங்களை ஊக்குவித்தாலும்பயணிக்கும் போது பெரும் அவஸ்தைகளே மிஞ்சுகிறது என்று பட்டிமன்ற தீர்ப்பு மாதிரி சொல்லி விடலாம்.
 புதுக்கல்லூரியில் படிக்கும்போது நாங்கள் வாங்கிக் கொடுத்த டிக்கட் OK  களும் தாதர் எக்ஸ்பிரஸ் டிக்கட்களின் மொத்த கூட்டுத்தொகையும் கின்னஸ் புக் கில் இடம் பெரும் அளவுக்கு அதிகமானது. [வெளிநாடு போய் இறங்கி ஒருவர் கூட 'கடுதாசி" போடாதது வேறு கதை]. பாஸ்போர்ட்டையும் டிக்கட்டையும் ரொம்பவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சொல்லி நம்மிடம் ரயில்வே ஸ்டேசனில் வந்து சொல்வார்கள். கடைசியில் ட்ரைன் நகறும் போது சத்தமாக மாப்லெ மறந்துடாம சொன்ன தேதிக்கு டிக்கட் OK வாங்கிட்டு தாக்கல் சொல்லிடு என்று மறவக்காடு/தம்பிக்கோட்டை ஸ்டேசன் மாஸ்டர் காதில் விழும் அளவுக்கு கத்துவார்கள். ஒருமுறை  நான் கொஞ்சம் "ம்ம் ம்ம் சரி" என்று அவ்வளவு வெயிட் கொடுத்து பேசாததால் என் மச்சான் என்னைப்பார்த்து சொன்னது டேய் பாஸ்போர்ட்டை / டிக்கட்டை காணாக்கிடாதே ..அப்படி காணாக்கிட்டா வரும்போது  திருவாரூர் / திருத்துறைப்பூண்டி எங்காவது  எறங்கி ஏதாவது மளிகைக்கடையிலே போய் எனக்கு வேலை கேட்டு வாங்கிட்டு வா.. நான் நல்லா சுருல் போடுவேன்.

நாம் கோபால் பல்பொடி மாதிரி  இலங்கை மலேசியாசிங்கப்பூர் என்று போன காலம் போய் கேள்விப்படாத நாட்டிற்கெல்லாம் போய் வருகிறோம். 

இன்னும் நமது மக்கள் தனது வேலைக்காக எங்கெல்லாம் போய் தனது வருமானத்திற்காக வாழ்க்கையில் பல வருடங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு வாரத்துக்குள் மலேசியா சிங்கப்பூர் வந்து   வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி இந்தியாவில் விற்கும் வியாபாரிகளை "குருவி"என்று சொல்வார்கள். நாம் எவ்வளவுதான் அதிக நாட்கள் தங்கினாலும் நாமும் ஒரு குருவிதான். கொஞ்சம்    நாள் பட்ட குருவி”.

[அப்பாடா 'இந்தாளு தலைப்பு க்கு சம்பந்தம் இல்லாமெ எழுதறான்னு யாரும் சொல்லிடக்கூடாதல்லவா? ].

இதைப்படித்த பிறகு 'உண்மையிலேயே இதில் ஒன்னுமில்லேதான்" என்று சொல்பவர்கள்தான் உண்மையான விமர்சகர்கள்.

நன்றி : ZAKIR HUSSAIN 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.