தமிழகத்தில் 11 வயதிலிருந்து 15 வயதுக்குள்பட்ட மாணவர்களில் 3 சதவீதம் பேர் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில், பணிபுரியும் இடங்களில் புகையிலை உபயோகிப்பதைத் தடை செய்வது குறித்த பயிலரங்கம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த பயிலரங்கில், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் புகையிலைப் பொருள்கள் உபயோகிப்பதைத் தடுக்க நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன.
பணிபுரியும் வளாகத்துக்குள் புகையிலை உபயோகிப்போருக்கு அபராதம் விதிப்பது, விழிப்புணர்வு பலகைகள் அமைப்பது, புகை பிடிப்பதற்கென உருவாக்கப்பட்ட இடங்களை தடை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 50 சதவீதமாக இருந்த புகைப்பழக்கம், தற்போது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் புகைப்பழக்கம் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது.
தமிழகத்தில் 24 சதவீத ஆண்கள் புகையிலை மற்றும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். 8 சதவீத பெண்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் மற்றொரு ஆய்வு தகவல் என்னவென்றால் 11 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள மாணவர்களில் 3 சதவீதம் பேருக்கு புகைப்பழக்கம் உள்ளது. இதைத் தடுக்கும் பங்கு பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு உண்டு. அவர்கள் குழந்தைகள் முன் புகையிலை உபயோகிக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புகையிலை உபயோகத்தைத் தடுக்கும் பங்கு அரசுக்கு மட்டும் அல்ல; ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு என்றார் அவர்.
No comments:
Post a Comment