Latest News

அதிரையில் ATCO வர்த்தக பொருட்காட்சி ஏன்?



 Date : 05-05-2013

அதிரையில் கடந்த 28-04-2013 முதல் கா.மு.மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் கலாச்சாரம் மற்றும் வர்த்தக பொருட்காட்சி பற்றிய தவறான செய்திகளை உள்நோக்கத்தோடு சிலர் திட்டமிட்டு பரப்புவதோடு, வெளிநாட்டில் வசிக்கும் அதிரை மக்களையும் குழப்பி வருவதைத் தொடர்ந்து,சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

ATCO பொருட்காட்சி ஏன்?

நம் முன்னோர்கள் பல அண்டை நாடுகளுடன் பாரம்பரிய வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தபோதும், அதிரையில்  குறிப்பிட்டுச் சொல்லும்படியான உள்ளூர் வியாபார நிறுவனங்கள் ஏதுமில்லை. 

அதிரை இளைஞர்கள் பள்ளிப்படிப்பு முடிக்கும் முன்பே பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு அனுபவம் இல்லாமல் செல்கின்றனர். உள்ளூரில் இருப்பவர்கள் எத்தகைய தொழில் செய்வது? எப்படி, எங்கு அணுகுவது? போன்றவற்றை அறியாமல் தொழில்களைத் தொடங்கி நஷ்டமடைந்து மீண்டும் வெளிநாடு செல்வது அல்லது வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு, உள்ளூரில் தொழில் தொடங்கியும் அவற்றை முறையாக சந்தைப்படுத்தும் வழிகளின்றி பத்தோடு பதினொன்றாக இருப்பதை கவனத்தில் கொண்டு,

1) உள்ளூர் நிறுவனங்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவித்து, சுற்றுவட்டார மக்களிடம் அவர்களது  பொருட்களை அறிமுகப்படுத்தவும்,

2) சாதாரண பட்டுப் புடவைக்குக்கூட திருச்சிக்கும், சென்னைக்கும் செல்லும் வீண்விரயத்தை தவிர்த்து, உள்ளூரில்  அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அனாவசிய செலவுகளை தவிர்ப்பதோடு, வெளியூருக்கு தனியாக  செல்வதால் ஏற்படும் சிரமங்களிலிருந்து நமது பெண்களை பாதுக்காக்கவும்,

3) பள்ளி விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு குடும்பத்தோடு சுற்றுலா செல்வதைத் தவிர்த்து,பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான பொழுதுபோக்கு, விளையாட்டு அம்சங்களுடன் கூடிய ஓர் நிகழ்வை ஏற்பாடு செய்வதும்,

4) அதிரை மட்டுமின்றி சுற்றுவட்டார ஊர்களில் நடக்கும் கந்தூரிகளுக்குச் செல்பவர்கள் "நாங்கள்  இணைவைக்கவோ / பிறவிசயங்களுக்காகவோ செல்லவில்லை,அங்கு விற்கப்படும் பொருட்கள் வாங்குவதற்கே செல்வதாகவும் சொல்பவர்களும் உண்டு. இதன் காரணமாகவும் கந்தூரிக்குச் செல்வதிலிருந்து ஊர்மக்களை மீட்க முடியவில்லை என்பதனையும் கருத்தில் கொண்டு, அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் வர்த்தக பொருட்காட்சியை அதிரையில் நடத்துவது என்று உள்ளுர் மற்றும் வெளிநாடுவாழும் அதிரையர்களின்  ஆலோசனையுன் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்பாராத தடைகள்

5) குறிப்பாக இதனை குறிப்பிட்ட முஹல்லாவில் சிறிதளவில் நடத்துவது என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது.  பின்னர் மேலும் சிலமுஹல்லாவாசிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து மேற்கண்ட நோக்கங்களை ஊரளவில்  நடாத்தலாம் என்று கருதி,அனைவரும் எளிதில் அணுகும் வகையில் கா.மு.பள்ளி மைதானத்தில் நடத்துவதென  பல மாதங்களுக்கு முன்பே அனுமதி பெறப்பட்டது. 

6) ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்ததால் தேர்வுகள் முடியும்வரை மாணவர்களின் கவனம் சிதறிவிடக்கூடாது  என்று விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகே மைதானம் & அரங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திடீரென பெய்த மழையால் மைதானத்தில் நீர்தேங்கி சகதியானதும் மிகுந்த சிரமத்திற்கிடையே சீர்செய்யப்பட்டது.

7) பிறமத சகோதரர்கள் நம் தூய மார்க்கத்தை அறிந்துகொள்ள ஏதுவாக, இலவச புத்தகங்கள் மற்றும் இதர பிரசுரங்களுக்கு பிரத்தியோக இடம் ஒதுக்கி செய்வதாக இருந்தோம், கடைசி நேர மழையால் செய்யமுடியாமல் போனது, இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இதனை அனைவரின் ஒத்துழப்புடன் செய்வோம்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

8) வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வேண்டி தீயணைப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டது. வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

9) பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு,  பாதுகாப்பு ஊழியர்களும் பொதுமக்களோடு ஊடுறுவி கண்காணித்து வருகின்றனர்.

10) நுழைவுக்கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கும்போது சமூக விரோதிகளும் வரக்கூடும் என்பதால் குறைந்த  கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு திருடர்கள் மற்றும் சமூக விரோதிகள் கலந்துவிடாதபடி நுழைவாயிலில் மட்டுறுத்தி  அனுப்பப்பட்டனர்.

சிறப்பம்சங்கள்:

11) அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வந்துசெல்லும் வகையில் சமயசார்பற்ற நிகழ்வாக இஃது அமைந்துள்ளது.  மேலும், இதன்மூலம் அதிரையின் பாரம்பரிய கலாச்சாரமும் சமூக ஒற்றுமையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

12) கந்தூரிகளில் கடைவைக்க தயங்கியவர்களும் தங்களது நிறுவனங்களை தயக்கமின்றி வைத்துள்ளனர்.

13) மாணாக்கர்களின் திறமைகளை ஊக்குவித்து பல்வேறு போட்டிகளும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

குறைகளும் குற்றச்சாட்டுகளும்

14) பல நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் வெகுசில சினிமா பாடல்களும், இசையும் இருந்தது. இதனை தவிர்த்துக் கொள்ளும்படி கண்ணியத்துக்குரிய அப்துல்காதர் ஆலிம் தலைமையில் அதிரை உலமாக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் 03-05-2013 முதல் இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதை காலை 8:30 மணிக்கு அறிவித்திருந்தோம். 

15) இந்நிலையில் ஒரு சிலர் இந்த பொருட்காட்சி சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று மாவட்ட  ஆட்சியருக்கு அனுப்பிய மனுவின்பேரில் 03-05-2013 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் கலெக்டரின்  PRO பொருட்காட்சி அரங்கைப் பார்வையிட்டு சென்றார்.

(“உலகிலேயே மிக எளிமையானது பிறரிடம் குறை கான்பது. உலகிலேயே மிக கடினமானது தன் குறை உணர்வது”)

வேண்டுகோள்:

16) நமதூரில் எதைச் செய்தாலும் அதில் குறைகாணவும், குற்றஞ்சொல்லவும் சிலர் இருக்கிறார்கள். உலமாக்கள்  வேண்டுகோளின் பெயரில் இசை நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட நோக்கங்களை அறியாத சிலர், பல்வேறு வகைகளில் குறிப்பாக இலைத்தளத்தில் அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் எந்த ஒரு நல்ல நிகழ்வு யார் மூலமாக நடந்தால் என்ன என்று இல்லாமல் இது எங்களால்தான் நடந்தது என்ற புகழ் எதிர்பார்ப்பு ஏன்? அவர்களின் கூற்றை பொய்பிக்கும் முகமாக, அவர்களின் தூண்டுதோலுக்கு இணங்க மீண்டும் சினிமா பாடல்கள் இடம்பெரும் சூழல் ஏற்பட்டால் அவர்களே இதற்கு பொருப்பாவார்கள்.

17) நீண்டகால திட்டத்துடன் லாபநோக்கின்றி, தன்னார்வலர்களின் ஆலோசனையுடன் செய்யப்பட்டு முறையான  அனுமதிகளுடன் செயல்பட்டு வரும் இந்த முயற்சி, நிச்சயம் மார்க்கத்திற்கும், நம்நாட்டு சட்டத்திற்கும் நமதூர்  கலாச்சாரத்திற்கு எதிராகச் செயல்படாது என்று உறுதியளிக்கிறோம்.

18) ஆகவே, தயவுசெய்து பொய்ப்பிரச்சாரங்களை நம்பாமல்,உங்கள் மேலான ஆலோசனை மற்றும்  கருத்துகளை பொருட்காட்சி நிர்வாகிகளிடமோ (அ) Email  மூலமோ தொடர்பு கொண்டு தெரிவித்தால், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் மேற்கண்ட  நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக அமையும்.

குறிப்பு: மேற்கண்ட விளக்கம், வெளிநாடுவாழ் பெரும்பாலான நல் உள்ளங்கள் கேட்டுக் கொண்டதற்காகவே அன்றி பதிலுக்கு பதில் என்ற அடிப்படையில் விதண்டாவாதத்திற்கு எங்களுடைய நேரத்தை வீணடித்து மீண்டும் இதுபோன்ற பதில் தருவது அவசியமற்றதாக இருக்கும் என்று நம்புவோம்.

இவண்,
ஒருங்கிணைப்பாளர்,
அதிரை வர்த்தகம் மற்றும் கலாச்சார அமைப்பு (ATCO)
தொடர்புக்கு: EMAIL: adiraifestival@gmail.com.
நன்றி : அதிரைநிருபர்

1 comment:

  1. நான் கூட கக்கா தமீம் அவர்கள்ளை தொடர்பு கொண்டு இதன் சம்மந்தமாக கருத்து பரிமாறி கொண்டோம்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.