எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்! வாழ்க தமிழினம்!!!
அண்மையில் கோவை நகரின் தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, கட்டிட விதிமுறைகளை மாநகராட்சி தீவிரமாக அமலாக்கத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால், வாகன நிறுத்துமிடம் இல்லாத வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கணக்கெடுப்பு வேகம் பெற்று வரும் நிலையில், தங்கள் வீடுகளை முழுமையாக இடம் மாற்றி வைக்கும் தொழில்நுட்பத்தை சிலர் நாடத் தொடங்கியுள்ளனர்.
புதிது ரூ.80 லட்சம், நகர்த்த ரூ.18 லட்சம்:
கோயமுத்தூரின் மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் உள்ள இந்த வீடு, கடந்த சில நாட்களாக அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். தங்கவேலு என்பவருக்கு சொந்தமான 2400 சதுர அடி மனையில் 400 டன் எடை கொண்டது இந்த வீடு. தனக்குச் சொந்தமான மனையில் வாகன நிறுத்துமிடத்துடன் புதிய வீடு கட்ட திட்டமிட்ட தங்கவேலு, நட்ட நடுவே பழைய வீடு தடங்கலாக இருப்பதை உணர்ந்தார். அதை இடித்து விட்டு அங்கே புது வீடு கட்ட 80 லட்ச ரூபாய் செலவாகும் என தெரிந்தது. மறுபுறம் தந்தையின் நினைவாக அந்த வீட்டை இடிக்கவும் மனமின்றி தவித்த அவர் எடுத்த முடிவுதான், அந்த வீட்டை அப்படியே 50 அடி தூரத்துக்கு நகர்த்தி வைப்பது என்பது.
10 நாளில் புது இடத்தில் வீடு போய்ச் சேரும்:
ஹரியானாவைச் சேர்ந்த நிறுவனப் பொறியாளர் குர்தீப் சிங் அதை செய்து முடிக்க முன்வந்தார். ஒரு சதுர அடி பரப்பை, ஒரு மீட்டர் தூரம் நகர்த்த 300 ரூபாய் கட்டணம் என்ற ஒப்பந்தப்படி, கடந்த 20 நாட்களுக்குமுன் பணி தொடங்கியது. கட்டிடத்தின் பக்கவாட்டில் துளைகள் போடப்பட்டு, அஸ்திவாரம் துண்டிக்கப்பட்டது. வீடு இடம்மாற வேண்டிய இடத்தில் தயாராக புதிய அஸ்திவாரம் போடப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தில் வீட்டை அலுங்காமல் ஒரு அடி உயரம் தூக்கி, அடியில் ஜாக்கிகள் மற்றும் நகர்வதற்கான சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இத்தனை வேலையிலும் குர்தீப் சிங்குடன் சேர்த்து 19 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 35 அடி தூரத்துக்கு வீடு நகர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் வீடு புதிய அஸ்திவாரத்தில் நிறுத்தப்பட்டு இணைக்கப்படும் என்கிறார் குர்தீப்.
இனி, நகரும் வீடுகள் அதிகரிக்கலாம்:
பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக இதே அளவு வீடு கட்டுவதற்கு 80 லட்ச ரூபாய் செலவாகும் நிலையில், வீட்டை வேறு இடத்துக்கு நகர்த்த 18 முதல் 20 லட்ச ரூபாய்தான் செலவு என்பதால், பணம் மிச்சம் என்கிறார் வீட்டின் உரிமையாளர். இதுவரை தரைதளம் மட்டுமே உள்ள வீடுகள் சிலவற்றை இடம் மாற்றியுள்ள நிலையில், மேல் தளம் கொண்ட பெரிய வீட்டை நகர்த்துவது இதுவே முதல்முறை என்கிறார் குர்தீப். பூகம்பத்தை தாங்கும் தொழில்நுட்பத்துடன், 100 சதவீத பாதுகாப்பு உறுதியையும் அவரது நிறுவனம் அளிக்கிறதாம். அரிய முயற்சியான இதன் வெற்றியைப் பொருத்து, இனி அடிக்கடி வீடுகள் இடம்மாறும் என எதிர்பார்க்கலாம்
No comments:
Post a Comment