Latest News

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2: தமிழகத்தில் 96% பேர் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் 96.4 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
 சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி மாணவி வர்ஷா, மயிலாப்பூர் வித்யா மந்திர் பள்ளி மாணவி ஐஸ்வர்யா ஆகியோர் 500-க்கு 494 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பத்மினி முரளிதர் 500-க்கு 493 மதிப்பெண் பெற்றுள்ளார்.
 சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அந்த வாரியத்தின் இணையதளத்தில் திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்டன.
 தேர்வு எழுதிய 9 லட்சத்துக்கும் அதிகமானோரில் 7.22 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 82.10 சதவீதம் ஆகும். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டும் மாணவர்களை விட (77.78%), மாணவிகளே (84.29%) அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 நாடு முழுவதுமுள்ள 8 மண்டலங்களில் சென்னை மண்டலம் இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 1 சதவீதம் அதிகரித்து 91.83 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கடுத்தபடியாக, தில்லி மண்டலத்தில் 86.78 சதவீதமும், ஆஜ்மீர் மண்டலத்தில் 86.26 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அலகாபாத் மண்டலத்தில் மிகவும் குறைந்த அளவாக 71.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கட்-ஆஃப் மதிப்பெண்: ஐ.ஐ.டி. உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்வில் முதல் 20 சதவீத இடங்களுக்குள் மாணவர்கள் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். இதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணையும் சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.
 அதன்படி, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 391 மதிப்பெண்ணும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 389 மதிப்பெண்ணும், எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கு 350, எஸ்.டி. மாணவர்களுக்கு 338 மதிப்பெண்ணும் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் 330 பள்ளிகளில் தேர்வு எழுதிய 9,238 மாணவ, மாணவியரில் 8,905 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன் ராவ் தெரிவித்தார்.
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளியான பிறகு அவர் கூறியது:  சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு இணையதளத்தில் உள்ள மதிப்பெண் சான்றிதழை பிரதி எடுத்து மாணவர்கள், தொடர்புடைய தேர்வுக் குழுவுக்கு அனுப்பலாம்.  ஒரு பாடத்தில் மட்டும் தவறியவர்களுக்காக துணைத் தேர்வு ஜூலை 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு ஜூன் 21-ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விடைத்தாளைச் சரிபார்க்க அடுத்த 5 நாள்களுக்குள் ரூ.300 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
கம்ப்யூட்டர் நிபுணராக வேண்டும்
சென்னை பள்ளிகளில் 494 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்த பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி மாணவி வர்ஷா கூறியது:  இந்த அளவு மதிப்பெண்ணை எதிர்பார்க்கவில்லை. எனக்கு வேதியியல், இயற்பியல், கணிதப் பாடங்களில் அதிக விருப்பம். ஆனால், அடிப்படை அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று உறவினர்கள் கூறியதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கும் தயார் செய்துவருகிறேன் என்றார் அவர்.
சி.ஏ. படிக்க விருப்பம்
சென்னை டி.ஏ.வி. பள்ளி மாணவி பத்மினி முரளிதர் 500-க்கு 493 மதிப்பெண் பெற்றுள்ளார். சி.பி.எஸ்.இ. தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தது தொடர்பாக அவர் கூறியது: பொதுத்தேர்வுக்கு முன்னதாக எங்கள் பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வுகள் மிகவும் உதவியாக இருந்தன. பொதுத்தேர்வை விடவும் இந்தத் தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்தன. எங்கள் குடும்பத்தில் அனைவரும் பட்டயக் கணக்கர்களாக உள்ளனர். எனவே எனக்கும் சி.ஏ. படிக்கவே விருப்பம் என்றார் அவர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.