Latest News

தந்தை பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?

கடந்த 23.05.2013 வியாழன் பின்னேரம் இரவு 8 மணியளவில், தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மைய சகோதரர்களால் 'தந்தை பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?' பெயரில் ஓர் ஆவணப்படம் துபை மாநகரின் பர்துபை பகுதியில் சிறப்பு அழைப்பாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.



நேற்றைய இஸ்லாமிய அழைப்பாளர்களின் இன்றைய தடம் வேறு என வேகவேகமாய் பலரும் நாள்தோறும் மாறிக் கொண்டிருக்கையில் 1920 முதல் 1973ல் இறக்கும் வரை ஒரே கொள்கையை ஏனைய மதங்களுக்கு மாற்றாக முன்வைத்து ஒடுக்கப்பட்ட மக்களை இஸ்லாத்தை நோக்கி ஓயாமல் அழைத்தவர் தந்தை பெரியார் என்பது வழமைபோல் வரலாற்றில் புதைந்திருக்கும் உண்மை. இந்த ஆவணப்படம் மூலம் அவ்வரிய பல உண்மைகளை ஆய்ந்து, ஆதாரத்துடன் நமக்குத் தருகிறார் பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள்.

பெரியாரின் அரிய ஆடியோ பதிவுகள் மற்றும் அய்யா ஆனைமுத்து அவர்களின் வரலாற்று தொகுப்புக்களிலிருந்து குறிப்புக்களை எடுத்தாண்டு எடுக்கப்பட்டுள்ள இவ்வாவணப் படத்தின் மூலம் இஸ்லாம், இறைவன் குறித்த தந்தை பெரியாரின் தெளிவான உயரிய சிந்தனைகளை அறிய முடிகிறது. நாத்திகமே பகுத்தறிவு என சுட்டப்படும் இவ்வேளையில் இஸ்லாத்தை ஆத்திக பகுத்தறிவு என்று அன்றே அடையாளமிட்டு ஓர் புரட்சிகர சிந்தனையை விதைத்துச் சென்றுள்ளார் தந்தை பெரியார். 

கடவுளை கற்பித்தவனை, உண்டாக்கியவனை, தான் உண்டாக்கிய கடவுளை நம்புகிறவனை, பரப்புகிறவனை, மூடநம்பிக்கைகளை சாடும் பெரியார் இஸ்லாமிய கடவுட் கோட்பாடு குறித்தும், முஸ்லீம்கள் இறைவனை எவ்வாறு நம்புகிறார்கள் என்பது குறித்தும் மிகவும் உயரிய எண்ணம் கொண்டிருந்துள்ளார் மேலும் இஸ்லாத்தின் பெயரால் சிலர் செய்யும் மூடச்சடங்குகளை, ஓர் உயரிய மார்க்கத்தில் இருந்து கொண்டு இதை செய்கின்றீர்களே என்றும் அன்போடு கடிந்து கொண்டுள்ளதன் மூலம் தூய இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் பெயரால் சிலர் செய்யும் தவறுகளையும் தெளிவாக பிரித்தறிந்து புரிந்து கொண்டிருந்திருக்கின்றார் தந்தை பெரியார்.



இவ்வாறாக, இவ்வாவண திரைப்படத்தின் சிறப்புகள் குறித்தும், பெரியாரின் இஸ்லாமிய அழைப்பு பணி குறித்தும், இஸ்லாத்தை தந்தை பெரியார் திராவிட மதமாக போற்றியது குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும், இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து என திராவிட இயக்க மேடைகளிலிலேயே அதிகம் அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.

மேலும் திரையிடலுக்குப்பின் நடந்ந நிகழ்வில் திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்த பேரறிஞர் அ.க.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் தமிழ் மொழியாக்க திருக்குர்ஆனை படித்து பின் அணிந்துரை வழங்கியது போன்ற தந்தை பெரியாரின் அரிய வரலாற்று துளிகள் நினைவு கூறப்பட்டது.

இந்த ஆவணப்படம் சமீபத்தில் சென்னையில் திரையிடப்பட்ட போது இஸ்லாமிய, நாத்திக மற்றும் இந்து மத சகோதரர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது என்ற போதும் இத்திரைப்படம் நகரங்கள், கிராமங்கள் என திரையிடப்பட்டு ஒவ்வொருவரையும் பெரியாரின் இஸ்லாமிய அழைப்பு சென்றடைய வேண்டும் எனவும் தேவையேற்படின் மொழிமாற்றம் செய்யப்படவும் நம் அனைவருடைய ஒத்துழைப்பையும் எதிர்நோக்கியுள்ளனர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையத்தினர். 



இரண்டு வருட உழைப்பில் உருவான இந்த ஆவணப்படம் இதுவரை சிறப்புப் பார்வையாளர்கள் என்ற அளவில் மட்டுமே ஆங்காங்கே திரையிடப்பட்டு வருகிறது இதுமேலும் விரிவடைந்து தலித் சமூக மக்கள், நாத்திக நண்பர்கள் என அவர்களின் இல்லங்களின் அருகே திரையிடப்பட்டு அவர்தம் உள்ளங்களில் மாற்றங்கள் ஏற்பட, தூய இஸ்லாம் அனைத்து மக்களிடமும் சென்றடைய இருகரமேந்தி ஏக இறைவனை பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

அமீரகம் வாழ் சகோதரர்கள், தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கிட சகோதரர் கீழை ஜமீல் அவர்களை 050 4985037என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

சென்னையில்
சகோதரர் செங்கிஸ்கான் 0091 9976885917
மவ்லவி இப்ராஹிம் காசிமி
பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் ஆகியோரை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

இறுதியாக, சென்னை திரையிடலில் கலந்து கொண்ட இந்து மத சகோதரர் ஒருவர், தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று தலித் மக்கள் அன்றே இஸ்லாத்தில் இணைந்திருப்பார்களேயானால் தர்மபுரி, மரக்காணம் போன்ற கலவரங்கள் இன்று நிகழ்ந்திருக்காது என தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அந்த வகையில் தந்தை பெரியாரின் அழைப்புப் பணியை ஏற்காத தலித்துகளும், பயன்படுத்திக் கொள்ளாத முஸ்லீம்களும் இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை ஏராளம்.

இக்குறைதனை போக்கிட இந்த ஆவணப்படத்தினை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்திட கரம் கோர்ப்போம் வாருங்கள்.

அதிரைஅமீன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.