தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு எழுதிய 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை ஒரே நாளில் 83 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆன்-லைன் மூலமாக கல்வித் தகுதியை இணையதளத்தில் பதிவு செய்தனர்.
மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள செல்லும்போதே மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைன் வழியில் கல்வித் தகுதியைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
மே 27 முதல் ஜூன் 10 வரை தங்களது கல்வித் தகுதியைப் பதிவு செய்யும் மாணவர்களுக்கு மே 27-ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகம் அறிவித்திருந்தது.
இணையதளம் மூலமாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ரேஷன் அட்டை, ஜாதிச் சான்றிதழை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ரேஷன் அட்டையில் பதிவுதாரர் பெயர் இருக்க வேண்டும். இதற்காக, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தனியாக பாஸ்வேர்டு வழங்கப்பட்டு, மாணவர்களின் கல்வித் தகுதி பதிவு செய்யப்பட்டது. கல்வித் தகுதியைப் பதிவு செய்த மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புப் பதிவு அட்டையும் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது.
மதிப்பெண் சான்றிதழ்களில் பிரச்னை: மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டவுடன் அதில் உள்ள பெயர்கள், பள்ளியின் பெயர், பதிவெண் போன்றவற்றில் ஆங்காங்கே பிழைகள் இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, பிழைகளுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் திங்கள்கிழமையே சென்னைக்கு வரவழைக்கப்பட்டன. பிழைகளைத் திருத்திய மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமையே விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று அரசுத் தேர்வுகள் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வம்: சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்ய அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் திங்கள்கிழமை 200 மாணவிகள் தங்களது கல்வித் தகுதியை ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.
எங்களது பள்ளியில் 400-க்கும் அதிகமான மாணவிகள் திங்கள்கிழமையே ஆர்வத்துடன் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுச்சென்றனர் என்று அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் கூறினார். புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்வத்துடன் தங்களது கல்வித் தகுதியைப் பதிவு செய்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment